பீஜிங்: சீனா - ஜப்பான் இடையே, 1937ல் நடந்த போரின் போது சீன போர்க்களத்தில் பணியாற்றி நுாற்றுக்கணக்கான உயிர்களை காப்பாற்றிய இந்திய டாக்டர் துவாரகநாத் கோட்னிஸை கவுரவிக்கும் விதமாக, சீனாவின் ஹெபே மாகாணத்தில் அவரது பெயரில் நினைவு மண்டபத்தை அந்நாட்டு அரசு திறந்துள்ளது. சீனா - ஜப்பான் இடையே, 1937 - 45 காலகட்டத்தில் போர் நடந்தது.
சீனாவின் நண்பர்
சீன தலைவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க, ஐந்து தன்னார்வ டாக்டர்கள் அடங்கிய மருத்துவ உ தவிக்குழுவை இந்திய தேசிய காங்கிரஸ் சீனாவுக்கு அனுப்பி வைத்தது. இந்த குழுவில், நம் நாட்டைச் சேர்ந்த டாக்டர் துவாரகநாத் கோட்னிஸ் இடம் பெற்று இருந்தார். இந்த குழு, போரில் காயம் அடைந்த சீன வீரர்களுக்கு தேவையான மருத்துவ சிகிச்சைகளை அளித்தது. ஒரு கட்டத்தில் கோட்னிஸ் உடன் சென்ற டாக்டர்கள் இந்தியா திரும்பினர். ஆனால், கோட்னிஸ் அங்கேயே தங்கி போர்க்களத்தில் பணியாற்றினார். மின்சாரம் இல்லாத நிலையிலும் அறுவை சிகிச்சைகளை செய்து, ஒரு நாளில், 18 மணி நேரம் உழைத்தார். 1,000க்கும் மேற்பட்ட சீன வீரர்களின் உயிரை காப்பாற்றினார். உள்ளுர் மருத்துவர்களுக்கும் பயிற்சி அளித்தார். அவருக்கு உதவியாக இருந்த சீன நர்ஸ் குவோ கிங்லானை, 1941ல் மணந்தார். போர் அழுத்தங்களால் அவரின் குழந்தை பருவ வலிப்பு நோய் தீவிரமடைந்தது. கடந்த 1942 டிச., 9ல் சீனாவின் ஹெபே மாகாணத்தின் குவோலியாங்லியாங் கிராமத்தில், அறுவை சிகிச்சை செய்யும்போதே மயங்கி விழுந்து உயிரிழந்தார். அப்போது அவருக்கு வயது 32. சீனாவின் மாமனிதராக கோட்னிஸ் போற்றப்பட்டார். சீன கம்யூனிஸ்ட் தலைவரான மா சேதுங் வெளியிட்ட இரங்கல் குறிப்பில், 'சீனாவின் நண்பர்' என கோட்னிசுக்கு புகழாரம் சூட்டினார். அவரது சேவை குறித்து, 'இந்தியாவில் இருந்து வந்த டாக்டர் கோட்னிஸ்' என்ற புத்தகம் 1941ல் வெளியிடப்பட்டது. சக்திவாய்ந்த சின்னம்
கடந்த, 1949க்கு பின் கோட்னிஸ் பெயரில் சீனா ஒரு மருத்துவ கல்லுாரியை கட்டியதுடன், அவரது உருவம் பொறித்த அஞ்சல் தலை வெளியிட்டு சிறப்பித்தது. மேலும், சின்ஜியாங் மாகாணத்தில் உள்ள ஒரு நகருக்கு கோட்னிஸ் பெயரை சூட்டியது. கோட்னிஸ், இந்திய - சீன நட்புறவின் ஒரு சக்திவாய்ந்த சின்னமாக இன்று வரை திகழ்ந்து வருகிறார். இந்நிலையில், சீனாவின் ஹெபே மாகாணத்தில் டாக்டர் துவாரகநாத் கோட்னிஸ் பெயரில் நினைவு மண்டபம் கட்டிய சீன அரசு, அதை சில தினங்களுக்கு முன் திறந்து மரியாதை செய்துள்ளது.