டிரம்ப் மிரட்டலுக்கு பணிந்தது கொலம்பியா தன் குடிமக்களை திரும்ப பெற ஒப்புதல்
வாஷிங்டன், பொருளாதார தடைகள் விதிக்கப்படும் என, அமெரிக்கா விடுத்த மிரட்டலுக்கு அடிபணிந்து, தங்கள் நாட்டில் இருந்து சட்டவிரோதமாக அமெரிக்காவில் குடியேறியவர்களை திரும்பப் பெற, கொலம்பியா ஒப்புக் கொண்டுள்ளது.அமெரிக்க அதிபராக கடந்த 20ம் தேதி பொறுப்பேற்ற டொனால்டு டிரம்ப், பல்வேறு அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்.  கெடுபிடி
குறிப்பாக அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய வெளிநாட்டவரை நாடு கடத்துவதில் டிரம்ப் தீவிரம் காட்டி வருகிறார்.அமெரிக்காவில் சட்ட விரோதமாகக் குடியேறிய, 18,000 இந்தியர்களைத் திரும்பப்பெற இந்தியா ஒப்புக் கொண்டுள்ளது.தென் அமெரிக்க நாடான கொலம்பியா இந்த நாடு கடத்தும் திட்டத்தை நிராகரித்தது. இதனால் ஆத்திரமடைந்த டிரம்ப், கொலம்பியா மீது வரி விதிப்பு, விசா ரத்து, பயணியர் வர தடை என, கெடுபிடிகளை விதித்தார்.சட்டவிரோதமாக குடியேறிய கொலம்பியர்களை இரண்டு விமானங்களில் அமெரிக்க அரசு அனுப்பி வைத்தது. அந்த விமானங்கள் தரையிறங்க கொலம்பியா அனுமதிக்கவில்லை.இதனால், கொலம்பிய நாட்டு இறக்குமதிக்கான வரியை 25 சதவீதம் உயர்த்தினார் டிரம்ப்.இது அடுத்த ஒரு வாரத்தில் 50 சதவீதமாக உயர்த்தப்படும் என்றும் தெரிவித்தார். மேலும், கொலம்பிய அரசு அதிகாரிகள் அமெரிக்கா வர தடை விதித்தார்.இதற்கு பதிலடியாக அமெரிக்காவிலிருந்து இறக்குமதி ஆகும் பொருட்களுக்கு 25 சதவீதம் வரியை உயர்த்தி, கொலம்பியா அதிபர் குஸ்டாவோ பெட்ரோ உத்தரவிட்டார்.  திடீர் மாற்றம்
'நீங்கள் எங்களுக்கு செய்வதை, நாங்களும் உங்களுக்கு செய்வோம்' என, தெரிவித்தார். இதனால் ஆடிப்போனது அமெரிக்கா.ஆனால் கொலம்பிய அரசு தன் நிலையை திடீரென மாற்றிக்கொண்டுள்ளது. அமெரிக்காவில் இருந்து அனுப்பி வைக்கப்படும் கொலம்பியர்களை ஏற்பதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
கொலம்பிய அதிபர் பதிலடி
அகதிகளை ஏற்க ஒப்புக் கொள்வதற்கு முன், டொனால்டு டிரம்புக்கு பதிலடி தரும் விதமாக கொலம்பிய அதிபர் குஸ்டாவோ பெட்ரோ வெளியிட்ட அறிக்கை:டிரம்ப் அவர்களே, அமெரிக்கா வர நான் விரும்பவில்லை. அது எனக்கு, 'போர்' அடிக்கிறது. உங்கள் எண்ணம் எனக்கு பிடிக்கவில்லை. பேராசை மனித இனத்தையே அழித்துவிடும். ஒரு கோப்பை விஸ்கியுடன் அமர்ந்து, ஒரு நாள் இது குறித்து வெளிப்படையாக நாம் விவாதிக்கலாம். நான் மட்டுமல்ல, எந்த கொலம்பியரும் உங்கள விட தாழ்வானவர் அல்ல. எங்கள் நாட்டின் மீது பொருளாதார, அரசியல் புரட்சியை ஏவ நீங்கள் முயற்சிக்கலாம். நான் உயிரிழந்தாலும் என் கொள்கைகளுடனேயே இறப்பேன்.இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.