| ADDED : பிப் 04, 2024 12:18 AM
ஒட்டாவா: ஏற்கனவே, இரு நாடுகளுக்கு இடையேயான உறவில் மோதல் நிலவும் நிலையில், தேர்தலை சீர்குலைக்கும் வெளிநாட்டு அச்சுறுத்தலாக இந்தியா உள்ளதாக, கனடாவின் பாதுகாப்பு உளவு அமைப்பு கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை வழக்கில் இந்திய ஏஜன்ட்களுக்கு தொடர்பு இருப்பதாக, வட அமெரிக்க நாடான கனடாவின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, கடந்தாண்டு குற்றஞ்சாட்டியிருந்தார்.இதைத் தொடர்ந்து, இரு நாடுகளுக்கு இடையேயான உறவு பாதிக்கப்பட்டது. இந்நிலையில், கனடாவின் பாதுகாப்பு உளவு சேவை பிரிவு, கடந்தாண்டு அக்டோபரில் அரசுக்கு ரகசிய ஆவணத்தை தாக்கல் செய்தது. இந்த ஆவணத்தின் ஒரு பகுதி தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.அந்த ஆவணத்தில், கனடாவில் தேர்தல் நடைமுறைகளில் நேரடியாக அல்லது மறைமுகமாக தலையீடு செய்யும் வெளிநாட்டு அச்சுறுத்தலாக இந்தியா உள்ளது என, குறிப்பிடப்பட்டுள்ளது. முதல் முறையாக இதுபோன்ற ஒரு குற்றச்சாட்டு இந்தியா மீது வைக்கப்பட்டுள்ளது.கனடா உளவு அமைப்பின் முந்தைய அறிக்கைகளில், சீனா, ரஷ்யா மீது இவ்வாறு குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.தற்போது இரு தரப்பு உறவுகள் மோசமாக உள்ள நிலையில், இந்தியா மீது இவ்வாறு குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.ஆனால், இது குறித்து, கனடா அரசோ, மத்திய அரசோ இதுவரை எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை.