உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியிருந்த இந்தியர்கள் தனி விமானம் மூலம் வெளியேற்றம்

அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியிருந்த இந்தியர்கள் தனி விமானம் மூலம் வெளியேற்றம்

வாஷிங்டன்: அமெரிக்காவில் சட்ட விரோதமாக தங்கியிருந்த இந்தியர்கள், தனி விமானம் மூலம் வெளியேற்றப்பட்டுள்ளனர்.அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்புத் துறை (The U.S. Department of Homeland Security DHS) மற்றும் குடியேற்றத்துறை சார்பில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இந்திய அரசின் ஒத்துழைப்புடன், சட்டவிரோத குடியேற்றத்தைக் தடுக்கும் நோக்கத்துடன், இந்த பணிகள் செய்யப்படுகின்றன.அமெரிக்கக் குடியுரிமை சட்டங்களை அமல்படுத்தும் உள்நாட்டு பாதுகாப்புத்துறை, நாட்டுக்குள் சட்ட விரோதமாக நுழைவோரைக் கடுமையாக எதிர்கொள்கிறது. சட்டரீதியான அடிப்படை இல்லாதவர்களை விரைவாகத் திருப்பி அனுப்புவதும் இந்த நடவடிக்கையில் அடங்கும். இந்தாண்டு மட்டும் இதுவரை, 160,000க்கும் மேற்பட்டவர்கள் அமெரிக்காவிலிருந்து அவரவர் நாட்டுக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இந்தியா உட்பட 145 நாடுகளுக்கு, 495 சர்வதேச விமானங்கள் மூலம் இவர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர்.'அமெரிக்காவில் தங்குவதற்கான சட்டரீதியான அடிப்படையின்றி வரும் இந்தியர்கள், உடனடியாகத் திருப்பி அனுப்பப்படுவார்கள். ஏமாற்றுக்காரர்களின் பொய் வாக்குறுதிகளில் அவர்கள் மாட்டிக்கொள்ளக் கூடாது,' என்று அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்புத் துறை துணை செயலாளர் கிரிஸ்டி ஏ. கானேகல்லோ கூறி உள்ளார். சட்ட விரோத குடியேற்றங்களை தடுப்பதற்காக, அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்புத்துறை, உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளின் அரசுகளுடன் தொடர்ந்து இணைந்து செயல்படுகிறது. கடந்த ஆண்டு, கொலம்பியா, ஈக்வடார், பெரு, எகிப்து, செனகல், உஸ்பெகிஸ்தான், சீனா மற்றும் இந்தியா உட்பட பல நாடுகளில் இருந்து அமெரிக்காவுக்கு சட்ட விரோதமாக வந்த பலர் திருப்பி அனுப்பப்பட்டனர்.வருமானமும் வேலைவாய்ப்பும் அமெரிக்காவில் எளிதாகக் கிடைக்கும் என்பதால் பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்களும் அமெரிக்காவிற்குள் எப்படியாவது நுழைந்தது விட வேண்டும் என்று எண்ணுகின்றனர்.இடைத்தரகர்கள் அவர்களைத் தவறாக வழிநடத்தி பணத்தை வாங்கிவிட்டு தவறான வழிகளில் நாட்டில் நுழைய உதவுகின்றனர். அது போன்ற மோசடி கும்பலிடம் ஏமாறக்கூடாது என்று அமெரிக்க அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.-நமது செய்தியாளர் முருகவேலு வைத்தியநாதன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை