உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / கரீபியன் தீவுகளில் நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கையால் பதற்றம்

கரீபியன் தீவுகளில் நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கையால் பதற்றம்

மெக்சிகோ : கரீபியன் கடலில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதை அடுத்து, சுற்றியுள்ள மூன்று தீவுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது. அமெரிக்க மத்திய தரைக்கடலை ஒட்டிய பகுதியில் கரீபியன் தீவுகள் அமைந்துள்ளன. இங்கு, 7,000க்கும் அதிகமான தீவுகள் உள்ளன. இதில், கடற்கரையை ஒட்டியுள்ள தீவுகளில் பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள கேமன் தீவில் நேற்று முன்தினம் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 7.6 ஆக பதிவானது. இது குறித்து அமெரிக்க புவியியல் சர்வே அமைப்பு வெளியிட்ட அறிக்கையில், 'மத்திய அமெரிக்க நாடான ஹோண்டுராசின் வடக்கே, கேமன் தீவில் இருந்து 209 கி.மீ.,க்கு தெற்கு மற்றும் தென்மேற்கு பகுதியில், கடலுக்கு அடியில் 10 கி.மீ., ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது' என, தெரிவிக்கப்பட்டது. நிலநடுக்கம் காரணமாக கேமன் தீவு, புவெர்ட்டோ தீவு மற்றும் அமெரிக்காவின் விர்ஜின் தீவுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது. ஹோண்டுராஸ் நாட்டின் வடக்கு பகுதிக்கும் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டதால், அங்கு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. கேமன் தீவுகள், ஜமைக்கா, கியூபா, மெக்சிகோ, ஹோண்டுராஸ், பகாமாஸ், பெலிஸ், ஹைட்டி, கோஸ்டாரிகா ஆகிய நாடுகளின் சில பகுதிகளிலும் சுனாமி எச்சரிக்கை காரணமாக பதற்றமான சூழல் நிலவியது. பெரிய அலைகள் எதுவும் தோன்றாததை அடுத்து, நிலநடுக்கம் ஏற்பட்ட அடுத்த மூன்று மணி நேரத்தில் சுனாமி எச்சரிக்கை திரும்பப் பெறப்பட்டது. நிலநடுக்கத்தால் ஒரு சில இடங்களில் கட்டடங்கள் குலுங்கின என்றும் பழமைவாய்ந்த கட்டடங்களில் விரிசல் ஏற்பட்டதாகவும் அமெரிக்க பேரிடர் மேலாண்மை குழு தெரிவித்துள்ளது. அசம்பாவித சம்பவங்கள் மற்றும் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை என்றும் கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை