நியூயார்க்: அமெரிக்க தேர்தல் களை கட்டியுள்ள நிலையில், தேர்தல் பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். ஆனால், அவர் அதிபராக இருந்தபோது வெள்ளை மாளிகையில் ஆதிக்கம் செலுத்திய மகள் இவாங்கா டிரம்ப், பிரசாரத்தில் ஈடுபடாமல் ஒதுங்கியுள்ளார்.அமெரிக்க அதிபர் தேர்தல் பிரசாரம் கடைசி கட்டத்தில் இருக்கிறது. ஜனநாயக கட்சி வேட்பாளராக போட்டியிடும் முன்னாள் அதிபர் டிரம்ப், கடைசி கட்ட சர்வே நிலவரப்படி, முன்னணியில் இருக்கிறார். துணை அதிபர் கமலாவை காட்டிலும், டிரம்ப் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று கருத்து கணிப்புகள் வெளியாக தொடங்கியுள்ளன. இத்தகைய சூழ்நிலையில், டிரம்ப் மட்டுமே அவருக்காக பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். அவரது அதிபர் பதவிக்காலத்தில் வெள்ளை மாளிகையில் ஆதிக்கம் செலுத்திய மகள் இவாங்கா டிரம்ப், மருமகன் குஷ்னர், மனைவி மெலனியா ஆகியோரை பிரசாரத்தில் காணவில்லை.டிரம்பின் முதல் மனைவியின் மகளான இவாங்காவும், அவரது கணவர் குஷ்னரும், டிரம்ப் அதிபராக இருந்த காலத்தில் அதிகாரபூர்வ அரசு பதவிகளில் இருந்தனர். அதிபரின் வலது கரம், இடது கரம் போன்று செயல்பட்டனர்.அரசு நிகழ்ச்சிகள் அனைத்திலும் பிரதானமாக பங்கேற்பர். பல்வேறு உலக நாடுகளுக்கும் அரசு முறைப்பயணம் செல்வதையும் வழக்கமாக கொண்டிருந்தனர். இந்தியாவுக்கும் கூட வந்திருந்தனர்.அப்படி இருந்த அவர்கள், இப்போது தீவிர பிரசாரம் நடக்கும் நிலையில், கட்சி நிகழ்ச்சிகளில் எங்குமே பங்கேற்கவில்லை. இவாங்கா, தன் 3 குழந்தைகளை பார்த்துக் கொள்கிறார். அவரது கணவர் குஷ்னர், சவுதி, அமீரகம், கத்தார் உள்ளிட்ட நாடுகளின் முதலீடுகளை பெற்றுள்ள நிதி நிறுவனத்தை நிர்வகிக்கிறார்.இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே, தாங்கள் அரசியலில் இருந்து விலகி இருக்கப்போவதாக இவாங்கா அறிவித்திருந்தார். அதன்படி டிரம்ப் பிரசாரத்தில் தலைகாட்டாமல் தம்பதி அமைதி காக்கின்றனர்.டிரம்ப் தேர்தலில் வெற்றி பெற்றால், இருவரும் மீண்டும் வந்து ஒட்டிக்கொள்வர் என்பது போன்ற விமர்சனங்கள் இப்போதும் எழுந்துள்ளன.அதற்கு பதில் அளித்துள்ள குஷ்னர், 'என் மாமனார் தேர்தலில் வெற்றி பெற்றாலும், எங்கள் நிலையில் மாற்றம் இருக்காது' என்று கூறியுள்ளார். 'இப்போதும், மாமனார் உடன் நாங்கள் நெருக்கமாக இருக்கிறோம். அவருக்கு ஏதாவது ஆலோசனை தேவை என்றால் நிச்சயமாக வழங்குவோம்' என்று பட்டும் படாமல் பதில் அளிக்கிறார் மருமகன் குஷ்னர்.'இவாங்கா தம்பதி, அரசியலில் இல்லை என்றாலும், டிரம்ப் அதிபர் ஆகி விட்டால், பொருளாதார ரீதியாக நிச்சயம் பயன் பெறுவர்' என்று விமர்சகர்கள் புகார் எழுப்புகின்றனர்.அதே நேரத்தில், டிரம்பின் மனைவி மெலனியா பிரசாரத்துக்கு வராமல் இருப்பது பல விதமான சந்தேகங்களை கிளப்பியுள்ளது.இப்படி மனைவி, மகள், மருமகன் ஆகியோர் பிரசாரத்துக்கு வராத நிலையில், டிரம்பின் மூத்த மருமகள் லாரா, பல்வேறு இடங்களில் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். மனைவியும், மகளும் இல்லாத இடத்தை, மருமகள் நிரப்புவதாக, அமெரிக்க பத்திரிகைகள் செய்தி வெளியிட்டு வருகின்றன.பொதுவாக அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடுவோர், தங்கள் மனைவி, குடும்பத்தினர் உடன் இணைந்து தான் தேர்தல் பிரசாரம் செய்வது வழக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.