| ADDED : டிச 21, 2025 10:35 AM
நமது நிருபர்சொத்து மதிப்பு 700 பில்லியன் அமெரிக்க டாலர்களைத் தாண்டிய முதல் நபர் என்ற சாதனையை டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரியும், எக்ஸ் சமூகவலைதள உரிமையாளருமான எலான் மஸ்க் படைத்தார்.டெஸ்லாவின் பங்கு மீட்சி, ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் எக்ஸ் ஏஐ நிறுவனத்தின் மதிப்பு உயர்ந்ததன் மூலம், எலான் மஸ்க் சொத்து மதிப்பு 700 பில்லியன் டாலரையும் கடந்தது. அவர் தொடர்ந்து உலகின் பெரும் பணக்காரர்களில் முதலிடத்தில் இருக்கிறார். டெஸ்லா நிறுவனத்தின் மீதான வழக்கில், எலான் மஸ்க்கிற்கு சாதகமாக தீர்ப்பு வந்ததால், அவரது சொத்து மதிப்பு 749 பில்லியன் டாலராக உயர்ந்து இருப்பது பல்வேறு தரப்பினர் கவனத்தை ஈர்த்துள்ளது.கடந்த அக்டோபர் மாதத்தில் எலான் மஸ்க் சொத்து மதிப்பு 500 பில்லியன் டாலராக இருந்தது. டிசம்பர் 2வது வாரத்தில் சொத்து மதிப்பு 600 பில்லியன் டாலரை எட்டியது. தற்போது ஒரே வாரத்தில் 700 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.உலகின் இரண்டாவது பணக்காரரான கூகுள் நிறுவனத்தின் நிறுவனர்களில் ஒருவர் லாரி பேஜின் சொத்து மதிப்பு 252.6 பில்லியன் டாலர் ஆகும். அதேநேரத்தில் மூன்றாவது இடத்தில் உள்ள ஆரக்கிள் கார்ப்பரேஷன் என்ற மென்பொருள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி லாரி எலிசனின் சொத்து மதிப்பு 242.7 பில்லியன் டாலர் ஆகும். தற்போது எலான் மஸ்க்கின் சொத்து மதிப்பு பட்டியலில் உள்ள அடுத்த மூன்று பணக்காரர்களின் மொத்த மதிப்புக்கு சமம். இதனால் வரலாற்றில் 700 பில்லியன் அமெரிக்க டாலர்களைத் தாண்டிய முதல் நபர் என்ற சாதனையை எலான் மஸ்க் படைத்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.