வங்கதேச முன்னாள் பிரதமர்: மேலும் 5 வழக்குகளில் விடுவிப்பு
டாக்கா: வங்கதேச முன்னாள் பிரதமர் கலீதா ஜியாவை மேலும் ஐந்து வழக்குகளில் இருந்து அந்நாட்டு நீதிமன்றம் விடுவித்துள்ளது.நம் அண்டை நாடான வங்கதேசத்தில், அந்நாட்டு சுதந்திர போராட்ட வீரர்களின் வாரிசுகளுக்கு, அரசு வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, டாக்கா உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மாணவர்கள் போராட்டம் தீவிரமடைந்தது. இதையடுத்து, பிரதமர் பதவியை ஷேக் ஹசீனா, 76, ராஜினாமா செய்து, கடந்த மாதம் 5ம் தேதி நம் நாட்டில் தஞ்சமடைந்தார்.இதையடுத்து, நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ், 84, தலைமையில் இடைக்கால அரசு பொறுப்பேற்றது. ஊழல் வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அந்நாட்டின் முன்னாள் பிரதமரும், முக்கிய எதிர்க்கட்சியுமான வங்கதேச தேசியவாத கட்சியின் தலைவருமான கலீதா ஜியாவை விடுதலை செய்யும்படி வங்கதேச அதிபர் முகமது ஷகாபுதீன் உத்தரவிட்டதையடுத்து, அவர் விடுவிக்கப்பட்டார்.கடந்த 2016ல் இவர் மீது செய்தியாளர் ஒருவர் வழக்கு தொடுத்தார். இதில், கலீதா ஜியா, வெவ்வேறு தேதிகளில் பிறந்தநாள் கொண்டாடி மோசடியில் ஈடுபடுவதாக குற்றஞ்சாட்டி இருந்தார்.இதே காலக்கட்டத்தில், வங்கதேச ஜனநேத்ரி பரிஷத் அமைப்பின் தலைவர் சித்திக் என்பவர் கலீதா ஜியா மீது, போர் குற்றவாளிகளுக்கு ஆதரவளித்தது, முன்னாள் அதிபர் முஜிப்பூர் ரஹ்மானை அவதுாறாக பேசியது, வங்கதேச விடுதலைப் போரில் உயிர்நீத்த வீரர்கள் பற்றி தவறாக பேசியது, கொலை மிரட்டல் விடுத்தது உள்ளிட்ட நான்கு புகார்கள் அளித்தார். இவற்றின் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இவற்றை விசாரித்த டாக்கா நீதிமன்றம், ஐந்து வழக்குகளில் இருந்தும் கலீதா ஜியாவை விடுவித்து நேற்று உத்தரவிட்டது.