ஜெர்மனி கிறிஸ்துமஸ் சந்தையில் சொகுசு காரை ஓட்டி ஐந்து பேர் பலி பயங்கரவாத தாக்குதலா என விசாரணை
பெர்லின்: ஜெர்மனியில் பரபரப்பான கிறிஸ்துமஸ் சந்தையில் சொகுசு கார் புகுந்ததில், ஐந்து பேர் பலியாகினர்; 70 பேர் காயமடைந்தனர். காரை தாறுமாறாக ஓட்டிய சவுதி அரேபியா டாக்டர் கைது செய்யப்பட்டார்; இதில் பயங்கரவாதிகளின் பின்னணி உள்ளதா என போலீசார் விசாரித்து வருகின்றனர்.உலகம் முழுதும் வரும் 25ம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, ஐரோப்பிய நாடான ஜெர்மனியின் பெர்லினில் இருந்து 130 கி.மீ., துாரத்தில் உள்ள மாக்டேபர்க் நகரத்தில் அமைக்கப்பட்டிருந்த சந்தையில், பொருட்களை வாங்க நேற்று முன்தினம் ஏராளமானோர் கூடியிருந்தனர்.அப்போது, இரவு 7:00 மணிக்கு அங்கு வேகமாக வந்த கருப்பு நிற பி.எம்.டபிள்யு., சொகுசு கார், பொருட்கள் வாங்கிக் கொண்டிருந்த கூட்டத்தில் புகுந்தது. இதையடுத்து, அங்கு இருந்தவர்கள் நாலாபுறமும் சிதறி ஓடினர். அதை பொருட்படுத்தாமல், 1,300 அடி துாரம் ஓடிய கார், அங்கிருந்த சில வாகனங்கள், பொருட்கள் மீது மோதியது. அங்கு வைக்கப்பட்டிருந்த கிறிஸ்துமஸ் மரங்களும், அலங்கார விளக்குகளும் சேதமடைந்து சந்தை கோரமாக காட்சியளித்தது. இந்த கொடூர விபத்தில் ஒரு குழந்தை உட்பட ஐந்து பேர் பலியாகினர்; 70க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். அவர்கள் உடனடியாக அருகில் இருந்த மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதில், சிலரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதால், உயிரிழப்பு அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.காரை ஓட்டிய சவுதி அரேபியாவைச் சேர்ந்த டாக்டர் தலேப், 50, என்பவரை, சந்தையில் இருந்த போலீசார் உடனடியாக கைது செய்தனர். அவரிடம் நடந்த விசாரணையில், தலேப் காரை வேண்டுமென்றே வேகமாக ஓட்டி சந்தையில் விபத்தை ஏற்படுத்தியது தெரிய வந்துள்ளது. இதையடுத்து, இந்த விபத்தின் பின்னணியில் பயங்கரவாத அமைப்புகளுக்கு தொடர்பு உள்ளதா என, போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த விபத்தை அடுத்து, ஜெர்மனியில் உள்ள முக்கிய நகரங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்துக்காக ஜெர்மனி வந்துள்ள சுற்றுலா பயணியர் மற்றும் உள்ளூர் மக்களை கவனமாக இருக்குமாறு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
யார் அந்த டாக்டர்?
கடந்த 2006ல் சவுதி அரேபியாவில் இருந்து ஜெர்மனிக்கு வந்த டாக்டர் தலேப், சாக்சோனி மாகாணத்தில் உள்ள அன்ஹால்டில் வசித்து வருகிறார். அகதி உரிமை பெற்றுள்ள இவர், உளவியல் சிகிச்சை நிபுணராக உள்ளார். பி.எம்.டபிள்யூ., சொகுசு காரை வாடகைக்கு எடுத்து, இந்த விபத்தை அவர் திட்டமிட்டு மேற்கொண்டதாக போலீசார் தெரிவித்தனர்.