இந்திரா அமைதி விருதுக்கு சிலி முன்னாள் அதிபர் தேர்வு
புதுடில்லி : மனித உரிமைகளுக்காக குரல் கொடுத்த சிலி நாட்டின் முன்னாள் அதிபர் மிட்செல் பேச்லெட்டிற்கு, 73, நடப்பாண்டிற்கான இந்திரா அமைதி விருது வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.முன்னாள் பிரதமர் இந்திராவின் நினைவு அறக்கட்டளை சார்பில் சர்வதேச அளவில் அமைதியை நிலைநாட்டும் முயற்சிகள், அறிவியல் கண்டுபிடிப்புகளை மக்கள் நலனுக்காக பயன்படுத்துதல் போன்ற செயல்களில் ஈடுபடும் தனி நபர்கள், அமைப்புகளை கண்டறிந்து ஆண்டுதோறும் இந்திரா அமைதி விருது வழங்கப்பட்டு வருகிறது.இதன்படி நடப்பாண்டுக்கான இந்திரா அமைதி விருது, தென் அமெரிக்க நாடான சிலியின் முன்னாள் அதிபர் மிட்செல் பேச்லெட்டிற்கு வழங்கப்படும் என அந்த அமைப்பு நேற்று அறிவித்துள்ளது. இதுகுறித்து அந்த அமைப்பின் சர்வதேச தேர்வுக்குழு தலைவரும், முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகருமான சிவ்சங்கர் மேனன் வெளியிட்ட அறிக்கை:அமைதி, மனித உரிமைகள், பாலின சமத்துவம் உள்ளிட்டவற்றுக்கு குரல் கொடுத்தவர்களில் முதன்மையானவர் சிலி நாட்டின் முன்னாள் அதிபர் மிட்செல் பேச்லெட். ஐ.நா., பெண்கள் அமைப்பின் இயக்குநர், ஐ.நா.,வின் மனித உரிமைகள் அமைப்பின் துாதர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார். உலகம் முழுதும் பாலின சமத்துவம் குறித்தும், அடித்தட்டு மக்களின் உரிமையை மீட்டெடுப்பதிலும் தன்னிகரற்ற தலைவராக மிட்செல் திகழ்ந்துள்ளார்.இவரது அமைதி பணியை பாராட்டும் வகையில், இந்திரா அமைதி விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.இது, மற்றவர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் அமையும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.