| ADDED : டிச 01, 2025 05:35 AM
நியூயார்க்: அமெரிக்காவில் குடியேறியுள்ள சட்டவிரோத வெளிநாட்டவரை திருப்பி அனுப்ப உதவுபவர்களுக்கு, ஒரு மாதத்துக்கு இலவசமாக பீர் வழங்குவதாக சர்ச்சைக்குரிய சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் இடஹோ மாகாணத்தின் ஈகிள் நகரில் உள்ள, 'ஓல்டு ஸ்டேட் சலுான்' என்ற மதுபான கடை, சர்ச்சைக்குரிய சலுகைகளை வழங்குவதில் பிரபலமானது. அந்த வகையில், தற்போது அமெரிக்காவில் நடந்து வரும் வெளிநாட்டவர் குடியுரிமைக்கு எதிரான நடவடிக்கை தொடர்பாக, அமெரிக்க மக்களுக்கு சமீபத்தில் ஒரு சலுகையை அறிவித்துள்ளது. இச்சலுகை குறித்து கடையின் சமூக வலைதள பதிவில் தெரிவித்திருப்பதாவது: இடஹோவில் உள்ள ஒரு சட்டவிரோத குடியேறியை, ஐ.சி.இ., எனப்படும் அமெரிக்க குடியுரிமை அதிகாரியிடம் அடையாளம் காண்பித்து, நாடு கடத்த உதவினால், அவர்களுக்கு ஓல்டு ஸ்டேட் சலுானில் ஒரு மாதம் இலவச பீர் வழங்கப்படும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இக்கடை, இதற்கு முன் கடந்தாண்டு ஜூன் மாதத்தில் 'சீரான பாலின விழிப்புணர்வு மாதம்' என்று அறிவித்து சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. காரணம், அம்மாதத்தை, எல்.ஜி.பி.டி.க்யூ., எனும் தன் பாலின ஈர்ப்பாளர்கள் ஜூன் மாதத்தை 'பிரைடு மாதம்' ஆக கொண்டாடுகின்றனர். கொரோனா காலத்தில் முக கவசம் அணிவது, சமூக இடைவெளி போன்ற கட்டுப்பாடுகளுக்கும் இக்கடை தன் கடும் எதிர்ப்பை தெரிவித்திருந்தது.