உக்ரைன் மீது ஐ.சி.பி.எம்., ஏவுகணை வீச்சு உக்கிரம் !
கீவ் : ரஷ்யா - உக்ரைன் போர் தீவிரமடைந்துள்ள நிலையில், உக்ரைன் மீது முதல்முறையாக, ஐ.சி.பி.எம்., எனப்படும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை ரஷ்யா ஏவியுள்ளது.ரஷ்யா - உக்ரைன் போர், 1,000 நாட்களை கடந்தும் தொடர்கிறது. உக்ரைனுக்கு பொருளாதார உதவிகள் மட்டுமின்றி, ஆயுதங்களையும் அமெரிக்கா வழங்கி உள்ளது. ஆனால், அதில் சில நிபந்தனைகளை அமெரிக்கா விதித்து இருந்தது. அதாவது, சில குறிப்பிட்ட ஆயுதங்கள் மற்றும் ஏவுகணைகளை பயன்படுத்துவதற்கு, அமெரிக்காவின் அனுமதியை உக்ரைன் பெற வேண்டும் என்பதே அந்த நிபந்தனை.இந்நிலையில், நீண்ட துாரம் பயணித்து ரஷ்ய நகரங்களை தாக்கும் திறன் உடைய ஏவுகணையை உக்ரைன் பயன்படுத்த, அமெரிக்கா சமீபத்தில் அனுமதி அளித்தது. இதனால் ஆத்திரமடைந்த ரஷ்ய அதிபர் புடின், அந்நாட்டு அணு ஆயுத கோட்பாட்டில் திருத்தம் செய்தார். இதன்படி, இந்த போரில் அணு ஆயுதம் வைத்துள்ள நாடுகள், அணு ஆயுதம் இல்லாத உக்ரைனுக்கு உதவினால், அந்த நாடுகள் ரஷ்யாவுக்கு எதிராக கூட்டாக போரிடுவதாகவே கருதப்படும் என தெரிவித்தார்.எனவே, உக்ரைன் மீது அணு ஆயுத தாக்குதல் நடத்தப்படும் என்றும் தெரிவித்தார். இது போரை தீவிரப்படுத்தியது. அமெரிக்க ஏவுகணைகளை ரஷ்யா மீது உக்ரைன் அடுத்தடுத்து வீசியது.இந்நிலையில், ஐ.சி.பி.எம்., எனப்படும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை இந்த போரில் ரஷ்யா முதல்முறையாக பயன்படுத்தி உள்ளது.ரஷ்யாவின் ஆஸ்டராகான் பிராந்தியத்தில் இருந்து ஏவப்பட்ட இந்த ஏவுகணை, 1,000 கி.மீ., தொலைவில் உள்ள மத்திய கிழக்கு உக்ரைனின் நிப்ரோ என்ற இடத்தை தாக்கியது. ராக்கெட் தயாரிப்பு நிறுவனத்தை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப் பட்டதாக தெரிகிறது.இதில், ஒரு தொழிற்சாலை மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான மறுவாழ்வு மைய கட்டடங்கள் சேதம் அடைந்தன; இருவர் காயம் அடைந்தனர். இந்த ஏவுகணை, அணுகுண்டுகளை ஏந்திச் சென்று தாக்கும் திறன் உடையது. ஆனால், நேற்று இந்த ஏவுகணையில் அணுகுண்டுகளை ரஷ்யா பயன்படுத்தவில்லை. இந்த தாக்குதல் தொடர்பாக பதில் அளிக்க ரஷ்ய அரசு மறுத்துவிட்டது. ரஷ்யாவின் இந்த நடவடிக்கையால், கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் போர் பதற்றம் அதிகரித்துள்ளது.
ஐ.சி.பி.எம்., என்றால் என்ன?
கண்டம் விட்டு கண்டம் பாயும் இந்த வகை ஏவுகணைகள், 10,000 முதல் 15,000 கி.மீ., வரை பயணித்து இலக்கை தாக்கும் திறன் உடையவை. ரஷ்யா நேற்று பயன்படுத்திய, 'ரூபேஷ் - 25' என்ற ஏவுகணை, 5,800 கி.மீ., துாரம் சென்று தாக்கக் கூடியது. கடந்த, 2012ல், இதற்கான சோதனையை வெற்றிகரமாக ரஷ்யா நடத்தியது. அணு ஆயுதங்களையும் இணைத்து பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த ஏவுகணை ஏவப்பட்ட உடன், இலக்கை நோக்கி மணிக்கு 24,000 கி.மீ., வேகத்தில் செல்லும். இறுதிக்கட்டத்தில் ஏவுகணையில் இருந்து பிரிந்து செல்லும் குண்டுகள், பல்வேறு இலக்குகளை நோக்கி மணிக்கு 3,200 கி.மீ., வேகத்தில் சென்று தாக்கும்.