வாய்ப்புகளை பயன்படுத்தும் திறன் இந்தியாவுக்கு உள்ளது
வாஷிங்டன் : ''உலகப் பொருளாதார சூழ்நிலை சவாலாக இருந்தாலும், புதிய வளர்ச்சி வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொள்ளும் திறன் இந்தியாவுக்கு உள்ளது,'' என, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டார்.மெக்சிகோ மற்றும் அமெரிக்காவில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சென்றுள்ளார். அமெரிக்காவின் கொலம்பியா பல்கலையின் இந்திய பொருளாதார கொள்கை மையத்தில் நேற்று முன்தினம் நடந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:கடந்த, 1-0 ஆண்டுகளில் உலக வளர்ச்சியானது, பல நாடுகளுக்கு இடையேயான வர்த்தகத்தால் அமைந்திருந்தது. ஆனால், வரும் ஆண்டுகள், இரு நாடுகளுக்கு இடையேயான உறவுகளாலேயே நிர்ணயிக்கப்படும்.உலகம் தற்போது நிலையில்லாத ஒரு கட்டத்தில் உள்ளது. இது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. உதாரணமாக, மேற்காசியாவில் போர், உக்ரைன் - ரஷ்யா போர் ஆகியவை, உலக அளவில் பெரும் சவாலாக அமைந்துள்ளன. இதைத் தவிர, டாலர் கையிருப்பு, உலகளாவிய வரி விகிதங்கள் உயர்வு, பெட்ரோலிய பொருட்கள் பகிர்வில் சிக்கல் என, பல பிரச்னைகள் இவற்றை மேலும் கடினமாக்கியுள்ளன. இதைத் தவிர, சீனாவின் வர்த்தக முறைகளால் உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்க வேண்டிய கட்டாயத்தில் பல நாடுகள் உள்ளன.இந்த காரணங்களால், ஒவ்வொரு நாடும் தங்களுடைய வினியோக சங்கிலி முறையை மாற்றிக்கொள்ள வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதுபோன்ற நேரத்தில், உலக நாடுகளின் நம்பிக்கைக்கு உரியதாக இந்தியா உள்ளது.உலகப் பொருளாதார சூழ்நிலை பெரும் சவாலை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், இதுபோன்ற சூழ்நிலையில் வளர்ச்சி வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொள்ளும் திறன் இந்தியாவுக்கு உள்ளது.இந்தியாவின் பொருளாதார கட்டமைப்புகள் மிகவும் வலுவானதாக உள்ளன. மேலும், எதிர்கால வளர்ச்சிக்கான அடித்தளம், கடந்த 10 ஆண்டுகளில் இடப்பட்டுள்ளது. இதனால்தான், 2013ல், உலகின் 1-0வது பெரிய பொருளாதாரமாக இருந்த இந்தியா, தற்போது, ஐந்தாவது இடத்தில் உள்ளது. வரும், 2027ல் மூன்றாவது இடத்தைப் பிடிப்போம்.முதலீடாக இருந்தாலும், வர்த்தகமாக இருந்தாலும் மிகவும் சிறந்த கூட்டாளி என்று உலக நாடுகள் இந்தியாவை நம்புகின்றன. இவ்வாறு கிடைக்கும் புதிய வாய்ப்புகளை இந்தியா சரியாக பயன்படுத்திக் கொள்கிறது.இவ்வாறு அவர் பேசினார்.