ஜோகனஸ்பர்க்: நான்காவது 'டி-20' போட்டியில் வென்று, தொடரை கைப்பற்ற இந்திய அணி காத்திருக்கிறது.தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்திய அணி 4 போட்டிகள் கொண்ட 'டி-20' தொடரில் பங்கேற்கிறது. தற்போது இந்தியா 2-1 என முன்னிலையில் உள்ளது. நான்காவது போட்டி இன்று ஜோகனஸ்பர்க்கில் நடக்க உள்ளது. என்னாச்சு சாம்சன்
முதல் போட்டியில் துவக்க வீரராக களமிறங்கிய கீப்பர் சஞ்சு சாம்சன் சதம் விளாசினார். அடுத்து யான்சென் 'வேகத்தில்' இரு முறை (0, 0) போல்டானார். இன்று எழுச்சி காண வேண்டும். கடந்த போட்டியில் அரைசதம் எட்டிய அபிஷேக் சர்மா, 'பார்மிற்கு' திரும்பியது பலம். மூன்றாவது வீரராக வந்த திலக் வர்மா, அசத்தல் சதம் அடித்தார். இவரது ரன் வேட்டை தொடரலாம். ராசியான மைதானம்
இந்திய அணிக்கு ஜோகனஸ்பெர்க், வாண்டரர்ஸ் மைதானம் ராசியானது. இங்கு 2007ல் 'டி-20' உலக கோப்பை பைனலில் (எதிர், பாக்.,) வென்று, சாம்பியன் பட்டம் கைப்பற்றியது. இதே மைதானத்தில் தான் சூர்யகுமார், 2023ல் சதம் (எதிர், தென் ஆப்ரிக்கா) அடித்தார். கேப்டனாகவும் அசத்துகிறார். 16 போட்டிகளில் 13ல் வெற்றி தேடித் தந்துள்ளார். இதன் வெற்றி சதவீதம் 81.25. 'ஆல்-ரவுண்டராக' கைகொடுக்க, ஹர்திக் பாண்ட்யா உள்ளார். தவிக்கும் ரிங்கு சிங்
ரிங்கு சிங் நிலை பரிதாபமாக உள்ளது. இத்தொடரில் 6, 7வது இடத்தில் வந்த இவர், 34 பந்துகளில் 28 ரன் (11,9, 8) தான் எடுத்துள்ளார். சிறந்த 'பினிஷரான' இவர், அதிக பந்துகளில் குறைவான ரன் எடுத்திருப்பது கவலைக்குரிய விஷயம். வழக்கமாக 5வது இடத்தில் வருவார். இந்த இடம் கிடைக்காததால், தடுமாறுகிறார். இதற்கு பயிற்சியாளர் லட்சுமண் தீர்வு காண வேண்டும். பந்துவீச்சு பலமாக உள்ளது. 'வேகத்தில்' அர்ஷ்தீப் சிங் மிரட்டுகிறார். 'சுழலில்' வருண் சக்ரவர்த்தி, பிஷ்னோய் மீண்டும் அசத்தினால், இந்திய அணி தொடரை 3-1 என எளிதாக கைப்பற்றலாம். ராமன்தீப் சிங்கிற்கு பந்துவீச வாய்ப்பு அளிக்கலாம். மில்லர் எங்கே
தென் ஆப்ரிக்க அணிக்கு கேப்டன் மார்க்ரம், அனுபவ மில்லர் ஏமாற்றுவது பலவீனம். கடந்த போட்டியில் கிளாசன், யான்சென் விளாசிய போதும், வெற்றியை தொட முடியவில்லை. பந்துவீச்சில் யான்சென், மஹாராஜ் நம்பிக்கை தருகின்றனர்.