அரசு பணியுடன் தனியாரிலும் வேலை செய்த இந்திய வம்சாவளி அமெரிக்காவில் கைது
வாஷிங்டன்: அமெரிக்காவில் அரசு ஊழியராக பணியாற்றிய இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒருவர், கூடுதலாக மற்றொரு வேலை பார்த்து, 40 லட்சம் ரூபாய்க்கு மேல் சம்பாதித்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டார். இக்குற்றம் நிரூபணமானால், 15 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அமெரிக்காவின் நியூயார்க்கைச் சேர்ந்தவர் மெஹுல் கோஸ்வாமி, 39; இந்திய வம்வசாவளியைச் சேர்ந்தவர். இவர், நியூயார்க்கில் உள்ள அரசு தகவல் தொழில்நுட்ப சேவைகள் அலுவலகத்தில் பணியாற்றி வந்தார். கோஸ்வாமி இப்பதவியில் இருந்து கொண்டே, தனியார் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் ரகசியமாக, 'மூன்லைடிங்' எனப்படும் கூடுதலாக மற்றொரு பணியில் ஊழியராக பணி செய்து வந்துள்ளார். இந்த கூடுதல் வேலையின் வாயிலாக அவர், 40 லட்சம் ரூபாய்க்கு மேல் சம்பாதித்ததாக கூறப்படுகிறது. ஒரு அரசு ஊழியர், மற்றொரு பணியில் ஈடுபடுவது அமெரிக்க அரசு சட்டத்தின் கீழ் தீவிரமான குற்றமாக கருதப்படுவதுடன், பொது வளங்களை துஷ்பிரயோகம் செய்வதாக கருதப்படும். இதனடிப்படையில், அரசு ஊழியர் ஒருவர் தன் பணியை புறக்கணித்துவிட்டு, சட்டவிரோதமாக பணம் சம்பாதிக்கும் நோக்குடன் மாற்றுப்பணியில் ஈடுபட்டதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இதையடுத்து, கோஸ்வாமி கைது செய்யப்பட்டார். இக்குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவருக்கு 15 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என கூறப்படுகிறது. இந்நிலையில், அம்மாகாணத்தின் மால்டா நீதிமன்றத்தில் ஆஜரான கோஸ்வாமி, ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.