காசாவில் இடைக்கால நிர்வாகம் பிரிட்டன் மாஜி பிரதமருடன் பேச்சு
லண்டன்:'காசாவில் போருக்கு பிந்தைய இடைக்கால அரசை, பிரிட்டன் முன்னாள் பிரதமர் டோனி பிளேர் வழிநடத்துவது குறித்து பேச்சு நடந்து வருகிறது. மேற்காசிய நாடான இஸ்ரேல் - காசா இடையேயான போர் இரண்டு ஆண்டுகளாக நடந்து வருகிறது. காசா போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான முயற்சிகள் நடந்து வருகின்றன. இந்நிலையில், காசா போர் முடிவுக்கு வந்ததும், அ ங்கு ஒழுங்கமைக்கப்பட்ட பாலஸ்தீன அரசு அமையும் வரை அமெரிக்கா தன் கட்டுப்பாட்டில் இடைக்கால அரசை அமைப்பது தொடர்பாக பேச்சு நடந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சில அரபு நாடுகளின் தலைவர்கள், சமீபத்தில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பை சந்தித்தபோ து இது தொடர்பாக பேசியதாக தெரிகிறது. போருக்குப் பிந்தைய காசா நிர்வாகத்திற்கான இடைக்கால அரசை வழிநடத்த பிரிட்டன் முன்னாள் பிரதமர் டோனி பிளேர் பெயர் பரிசீலிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின. இது தொடர்பாக அவருடன் பேச்சு நடக்கிறது. அமெரிக்கா ஆதரவுடன் செயல்படுத்தப்படும் இந்த அரசு, ஐந்து ஆண்டுகள் வரை காசாவில் ஒரு இடைக்கால அதிகாரத்தை நிறுவும். இது காசா மீது அரசியல் மற்றும் சட்ட அதிகாரத்தை கொண்டிருக்கும். போருக்குப் பிந்தைய காசாவின் நிர்வாகத்தில் ஹமாஸ் எந்தப் பங்கையும் வகிக்காது என்று இந்தத் திட்டம் கூறுகிறது. மேலும் ஐ.நா., மற்றும் அரபு நாடுகளின் ஆதரவுடன், பன்னாட்டுப் படையால் பாதுகாக்கப்படும். ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு, நிர்வாகக் கட்டுப்பாடு பாலஸ்தீனியர்களிடம் ஒப்படைக்கப்படும் என, கூறப்படுகிறது. இந்தநிலையில் இடைக்கால அரசு குறித்து ஹமாஸ் அமைப்போ, இஸ்ரேலோ எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.