துபாய்: ஈரானின் அணுசக்தி தளங்கள் மற்றும் ராணுவ தளபதிகளை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்திய நிலையில், அதற்கு பதிலடியாக ஈரான் நேற்று அதிகாலை ஏராளமான ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை இஸ்ரேலின் டெல் அவிவ் நகர் மீது ஏவியது. இதில் மூன்று பேர் பலியாகினர்; ஏராளமானோர் காயமடைந்தனர்.மேற்காசிய நாடுகளான இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே, கடந்த 45 ஆண்டுகளாக மோதல் போக்கு நிலவுகிறது. இஸ்ரேலை தனி நாடாக ஏற்க ஈரான் மறுக்கிறது. அதை பாலஸ்தீனத்தின் ஆக்கிரமிப்பு பகுதி என்றே குறிப்பிடுகின்றனர். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=6qwlpk9k&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இரு நாடுகளுக்கும் இடையிலான சண்டை, 2023ல் இருந்து தீவிரமடைந்தது. அப்போது பாலஸ்தீனத்தின் காசா பகுதியை கட்டுப்பாட்டில் வைத்திருந்த ஹமாஸ் பயங்கரவாதிகள் இஸ்ரேலுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தினர். அதில் 1,200 இஸ்ரேலியர் கொல்லப்பட்டனர். 250 பேர் பிணைக்கைதிகளாக ஹமாஸ் படையினரால் பிடித்துச் செல்லப்பட்டனர். இந்த சம்பவத்தால் ஆத்திரமடைந்த இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, காசா மீது போர் தொடுத்தார். ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக ஈரான் உதவியுடன் லெபனானின் ஹெஸ்பொல்லா பயங்கரவாதிகளும் இஸ்ரேலை தாக்கினர். ஈரானும் அவ்வப்போது இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது. இஸ்ரேலை ஒழித்துக்கட்ட ஈரான் அணு ஆயுதம் தயாரிப்பதாக இஸ்ரேல் கூறுகிறது. யுரேனியத்தை அணு ஆயுதமாக பயன்படுத்த அதை 90 சதவீதம் செறிவூட்ட வேண்டும். 'மே மாத நிலவரப்படி ஈரானிடம் 410 கிலோ யுரேனியம் உள்ளது. அவை 60 சதவீதம் செறிவூட்டப்பட்டவை. பிப்ரவரியில் இந்த வகை யுரேனியத்தின் அளவு ஈரானிடம் 134 கிலோவாக இருந்தது' என சர்வதேச அணுசக்தி முகமை கூறியுள்ளது. அதாவது, இன்னும் சில மாதங்களில் ஈரான் பல அணுகுண்டுகளை தயாரித்து விடலாம்; அவற்றை கொண்டு இஸ்ரேலை அழித்து விடலாம் என்று இஸ்ரேல் அரசு கருதியது. இதனால், ஈரானின் அணுகுண்டு தயாரிப்பு கட்டமைப்பை தாக்கி அழிக்க இஸ்ரேல் முடிவு செய்தது. ஏற்கனவே தங்கள் மொசாட் உளவு அமைப்பின் உதவியுடன் அணுசக்தி தளங்கள், ஏவுகணை உற்பத்தி மையங்கள், ராணுவ தளங்கள், படை தளபதிகளின் நடமாட்டம் ஆகியவற்றை கண்காணித்து திட்டம் வகுத்தது. அதன்படி, மொசாத் உளவாளிகள் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களுடன் ஈரானுக்குள் ஊடுருவினர். ஏராளமான ரகசிய தாக்குதல் தளங்களை நிர்மாணித்தனர். அதன் பிறகு, நேற்று முன்தினம் 'ஆப்பரேஷன் ரைசிங் லயன்' என்ற பெயரில் தாக்குதலை இஸ்ரேல் துவங்கியது. நுாற்றுக்கணக்கான போர் விமானங்கள், ட்ரோன்கள் ஈரானுக்குள் பாய்ந்தன. ஈரானின் அணு ஆயுத தளங்கள், ராணுவ தளங்கள் மீது குண்டுமழை பொழிந்தன. முன்பே ரெடியாக இருந்த மொசாத் உளவாளிகள், ட்ரோன்களை ஆக்டிவேட்செய்து, ஈரானின் வான் பாதுகாப்பு கட்டமைப்பை செயலிழக்க செய்ததால், இஸ்ரேலின் விமான தாக்குதல் எதிர்ப்பின்றி நடந்து முடிந்தது. மூன்று ராணுவ தளபதிகள், அணு விஞ்ஞானிகள் உட்பட 78 பேர் உயிரிழந்தனர். 320க்கு மேற்பட்டோர் காயமடைந்தனர். ஈரான் பதிலடி
'இஸ்ரேல் தாக்குதலுக்கு கடும் தண்டனை வழங்கப்படும்' என ஈரான் உயரிய தலைவர் அயதுல்லா அலி கமேனி எச்சரித்திருந்தார். அதன்படி நேற்று முன்தினம் இரவு. இஸ்ரேலின் டெல் அவிவ், ஜெருசலேம் உள்ளிட்ட நகரங்களை குறிவைத்து 150க்கு மேற்பட்ட ஏவுகணைகளை ஈரான் ஏவியது. இவை ஈராக் வான் பரப்பு வழியாக இஸ்ரேல் எல்லை நோக்கி சீறிப்பாய்ந்தன. இதில் பெரும்பாலானவற்றை ஈரானின் 'அயர்ன் டோம்' எனும் வான் பாதுகாப்பு கவச அமைப்பு வானிலேயே தாக்கி அழித்தது. இஸ்ரேல் ராணுவத்துக்கு உதவியாக, அந்த பிராந்தியத்தில் உள்ள அமெரிக்காவின் வான் பாதுகாப்பு கவச அமைப்பும், ஈரான் ஏவுகணைகளை சுட்டு வீழ்த்தியது. ஒரு சில ஏவுகணைகள் இஸ்ரேல் நகரங்களை தாக்கின. அதற்கு முன் வான் தாக்குதலுக்கான எச்சரிக்கை சைரன் ஒலித்ததால் மக்கள் பதுங்கு குழிகளில் தஞ்சமடைந்தனர். இருப்பினும் ஈரானின் தாக்குதலில் இஸ்ரேலியர்கள் மூன்று பேர் உயிரிழந்தனர். ஐம்பதுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். நூற்றுக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் சேதமடைந்தன.இஸ்ரேலின் தொடர்ச்சியான வான்வழித் தாக்குதல்களும், ஈரானின் பதிலடி நடவடிக்கையும் இரு நாடுகளின் தலைநகரங்களும் நாசமாகும் ஆபத்தை உருவாக்கியுள்ளது.
டெஹ்ரான் அழியும்
இஸ்ரேல் ராணுவ அமைச்சர் காட்ஸ் நேற்று அளித்த பேட்டியில், “இஸ்ரேலின் குடியிருப்பு பகுதிகள் மீது ஈரான் ஏவுகணைகளை வீசினால், ஈரான் தலைநகர் டெஹ்ரானை அழிப்போம். ஈரான் சர்வாதிகாரி அயதுல்லா அலி கமேனி அந்த நிலையை உருவாக்க நினைக்கிறார். இஸ்ரேல் இதுவரை ஈரானிய அணுசக்தி மற்றும் ராணுவ தளங்களை மட்டுமே தாக்கியுள்ளது” என்றார்.
ஈரான் தளபதிகள்
மேலும் இருவர் பலிஈரான் மீது இஸ்ரேல் நேற்று அதிகாலை மீண்டும் நடத்திய தாக்குதலில், உளவுப்பிரிவு துணைத் தலைவர் ஜெனரல் கோலம்ரேசா மெஹ்ராபி, ராணுவ செயல்பாடுகளுக்கான துணைத் தலைவர் ஜெனரல் மெஹ்தி ரப்பானி ஆகியோர் கொல்லப்பட்டனர்.இஸ்ரேல் தாக்குதலில் அணுசக்தி நிலையங்கள் சேதமடைந்ததை ஈரான் அந்நாட்டு அணுசக்தி முகமையின் செய்தித் தொடர்பாளர் பெஹ்ரோஸ் உறுதிப்படுத்தினார். இருப்பினும் முன் கூட்டியே முக்கிய சாதனங்கள் மற்றும் பொருட்களை இடமாற்றியதாக தெரிவித்தார்.