உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / ஈரான் துறைமுக வெடி விபத்து: பலி 30 ஆக உயர்வு

ஈரான் துறைமுக வெடி விபத்து: பலி 30 ஆக உயர்வு

மஸ்கட் : ஈரான் நாட்டின் முக்கிய துறைமுகத்தில் நிகழ்ந்த பயங்கர தீ மற்றும் வெடி விபத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை, 30 ஆக அதிகரித்துள்ளது; 750க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.ஈரானில் பரபரப்பான துறைமுகங்களில் ஒன்று ஷாஹித் ராஜாய். தலைநகர் டெஹ்ரானில் இருந்து, 1,000 கி.மீ., தென் கிழக்கே அமைந்துள்ள இந்த துறைமுகத்திலிருந்து தான், அந்நாட்டின் எண்ணெய் சரக்கு போக்குவரத்து, 20 சதவீதம் அளவுக்கு நடைபெறுகிறது.இங்கு வந்து சேரும் எரிபொருட்கள், பிற இடங்களுக்கு பத்திரமாக அனுப்பி வைக்கப்படுகின்றன. இங்கு, நேற்று முன்தினம் இரவில் திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. தீயை அணைக்க வீரர்களுடன் இணைந்து, ராணுவத்தினர் முயற்சிகள் மேற்கொண்டும், பல மணி நேரத்திற்கு தீ கட்டுக்கடங்காமல் பரவியது.இதனால், ஹெலிகாப்டர்கள் மற்றும் சிறிய ரக விமானங்களில் தண்ணீர் எடுத்து வந்து, எரியும் தீயில் கொட்டப்பட்டது. இந்த விபத்தில் நேற்று முன்தினம் வரை, ஐந்து பேர் பலியானதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், பலியானோர் எண்ணிக்கை நேற்று 30 ஆக அதிகரித்தது; 750க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.மிகவும் பரபரப்பான அந்த துறைமுகத்தில் ஒன்றன்பின் ஒன்றாக பல கன்டெய்னர்கள் நேற்று மதியம் வரை வெடித்து சிதறியதால், பாதிப்பு மேலும் அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.இந்த தீ விபத்து மற்றும் அதை தொடர்ந்த வெடி விபத்துக்கு என்ன காரணம் என்பது, அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. எனினும், ஏவுகணைகளுக்கான எரிபொருட்கள் தீப்பிடித்து, விபத்து நடந்திருக்க வேண்டும் என கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ