| ADDED : நவ 27, 2025 12:23 AM
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை சந்திக்க, கடந்த ஓராண்டுக்கு மேலாக அவரது சகோதரிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால், அவர் உயிருடன் இருக்கிறாரா என ஆதரவாளர்கள் மத்தியில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. நம் அண்டை நாடான பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், ராவல்பிண்டியில் உள்ள அடியாலா சிறையில் கடந்த 2023ம் ஆண்டு முதல் அடைக்கப்பட்டுள்ளார். ஊழல் வழக்குகள் உட்பட பல்வேறு வழக்குகளில் சிக்கி, தனிமை சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார். இந்நிலையில் கடந்த ஓராண்டுக்கும் மேலாக இம்ரான் கானை சந்திக்க அவரது சகோதரிகள் முயன்றபோதும், பாக்., அதிகாரிகள் அனுமதி தரவில்லை என கூறப்படுகிறது. இதனால், சிறையில் அவர் பல்வேறு சித்ரவதைகளுக்கு ஆளாகி இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, இம்ரான் கான் பற்றி கவலை அடைந்த அவரது பாகிஸ்தான் தெஹ்ரீக் - இ - இன்சாப் கட்சி நிர்வாகிகளும், மூன்று சகோதரிகளும் போராட்டம் நடத்தினர். அவர்களை பஞ்சாப் மாநில போலீசார் தடுத்து நிறுத்தி தாக்கியதாகவும், இம்ரான் கானின் சகோதரிகளில் ஒருவரான நுாரீன் நியாசி தலைமுடியை பிடித்து இழுத்து கீழே தள்ளியதாகவும் கூறப்படுகிறது. மேலும், போராட்டத்தில் ஈடுபட்ட பிற பெண்களையும் போலீசார் தாக்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. காட்டுமிராண்டித்தனமாக நடந்து கொண்ட போலீசார் மீது பாரபட்சமற்ற முறையில் நடவடிக்கை எடுக்கக் கோரி, பஞ்சாப் மாகாண காவல்துறைக்கு இம்ரானின் சகோதரிகள் கடிதம் எழுதியுள்ளனர். இம்ரான் கானின் உடல்நிலை மற்றும் பாதுகாப்பு குறித்து கவலைகள் நிலவுவதால், அவரை சந்திக்க முடியாமல் அவரது குடும்பத்தினரும், ஆதரவாளர்களும் மிகுந்த பதற்றத் துடன் உள்ளனர். இதற்கிடையே, அவரை சந்திக்க இயலாததால், சமூக ஊடகங்களில் அடியாலா சிறையில் இம்ரான் கான் சித்தரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டு விட்டதாக வதந்திகள் பரவத் துவங்கின. இந்த வதந்தியை நிராகரித்துள்ள இம்ரான் கான் கட்சியினர் அமைதி காக்கும்படி ஆதரவாளர்களை கேட்டுக் கொண்டுள்ளனர்.