காசா, லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்... தீவிரம்! சரமாரி குண்டு வீச்சில் 26 பேர் பலி
டெய்ர் அல்பலாஹ் : வடக்கு காசாவில் இஸ்ரேல் ராணுவம் தன் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது. மசூதி மற்றும் பள்ளியில் நடத்தப்பட்ட வான்வழி தாக்குதலில், 26 பேர் கொல்லப்பட்டனர். லெபனானின் தெற்கு பகுதியிலும் இஸ்ரேல் ராணுவம் நேற்றும் தாக்குதலை தொடர்ந்தது. மேற்காசிய நாடான இஸ்ரேல் மீது, காசாவை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஹமாஸ் பயங்கரவாதிகள் கடந்தாண்டு, அக்., 7ல் தாக்குதல் நடத்தினர். இதில், 1,200 பேர் கொல்லப்பட்டனர். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=5xl9xrdq&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இதையடுத்து, ஹமாஸ் பயங்கரவாதிகள் மீது இஸ்ரேல் ராணுவம் போர் தொடுத்தது. அது ஓராண்டை எட்டியுள்ளது. இதற்கிடையே, ஹமாஸ் பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவாக, அண்டை நாடான லெபனானில் இருந்து இயங்கும் ஹெஸ்பொல்லா பயங்கரவாதிகள் இஸ்ரேல் மீது தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வந்தனர். சமீபத்தில் அந்த அமைப்புக்கு எதிராக இஸ்ரேல் ராணுவம் தீவிர தாக்குதலில் ஈடுபட்டது. அந்த அமைப்பின் தலைவர் உட்பட பல முக்கிய தளபதிகள் கொல்லப்பட்டனர்.இந்த இரண்டு பயங்கரவாத அமைப்புகளுக்கும் ஆதரவு அளித்து வரும் ஈரான், இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது. ஒரே நேரத்தில், 180க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை செலுத்தியது. இதையடுத்து, மும்முனை தாக்குதல்களை இஸ்ரேல் சந்தித்து வருகிறது. ஈரானுக்கு தகுந்த பதிலடி தரப்படும் என, இஸ்ரேல் ராணுவம் எச்சரித்துள்ளது.காசாவின் வடக்கு பகுதியில் உள்ள மக்களை தென் பகுதிகளுக்கு செல்லுமாறு இஸ்ரேல் ஏற்கனவே எச்சரித்திருந்தது. இருப்பினும் 30,000க்கும் மேற்பட்டோர் அங்கு தொடர்ந்து இருப்பதாக கூறப்படுகிறது. கட்டடங்கள் உள்ளிட்டவை கடுமையாக சேதமடைந்த நிலையில், மசூதி, பள்ளிகளில் மக்கள் தங்கியுள்ளனர்.இந்நிலையில், இஸ்ரேல் ராணுவம் வடக்கு காசாவின் டெய்ர் அல்பலாஹ் நகரின் முக்கிய மருத்துவமனைக்கு அருகே உள்ள மசூதியை குறிவைத்து நேற்று வான்வழி தாக்குதலை நடத்தியது. இதைத் தவிர, ஒரு பள்ளி மீதும் தாக்குதல் நடத்ப்பட்டது. இந்த தாக்குதல்களில் 26 பேர் உயிரிழந்தனர். பயங்கரவாதிகளை குறிவைத்து இந்தத் தாக்குதல்கள் நடந்ததாக இஸ்ரேல் கூறியுள்ளது.காசாவின் வடக்கு பகுதிக்குள் நுழைந்து தரைவழி தாக்குதல் நடத்துவதற்காக, இஸ்ரேல் ராணுவம் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.இஸ்ரேல் - ஹமாஸ் போர் ஓராண்டை எட்டியுள்ள நிலையில், காசா பகுதியில், 42,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.ஹெஸ்பொல்லா பயங்கரவாதிகளை குறிவைத்து, லெபனானில் இஸ்ரேல் ராணுவத்தின் தாக்குதலும் தீவிரமடைந்துள்ளது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில், 1,200க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.இந்நிலையில், தலைநகர் பெய்ரூட்டின் தென் புறநகர் பகுதியில், ஹெஸ்பொல்லா பயங்கரவாதிகளை குறி வைத்து, நேற்று இரவில், 30 முறை வான்வழி தாக்குதலை இஸ்ரேல் ராணுவம் நடத்தியது. இதில் பெரும் சேதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, லெபானனில் வசிக்கும் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் அங்கிருந்து வெளியேறி வருகின்றனர். இஸ்ரேலில் தாக்குதல்
இதற்கிடையே, காசா பகுதியில் இருந்து இஸ்ரேலை நோக்கி, ஹமாஸ் அமைப்பினர் ஏவுகணை தாக்குதல் நடத்தியதாக நேற்று இரவு தகவல் வெளியானது. ஆனால், இரு தரப்பும் இந்த தாக்குதலை உறுதிப்படுத்தவில்லை. இந்நிலையில், ''தேவைப்பட்டால் இஸ்ரேல் மீது மீண்டும் தாக்குதல் நடத்துவோம்,'' என ஈரான் தலைவர் கமெனி நேற்று மீண்டும் எச்சரிக்கை விடுத்தார்.
பிரான்ஸ் கருத்துக்கு எதிர்ப்பு
இஸ்ரேல் நடத்தி வரும் போர் குறித்து, ஐரோப்பிய நாடான பிரான்சின் அதிபர் இமானுவேல் மேக்ரான் நேற்று முன் தினம் கருத்து தெரிவித்திருந்தார்.'தற்போதைய நிலையில், அரசியல் ரீதியில் பிரச்னைக்கு தீர்வு காண முன்னுரிமை அளிக்க வேண்டும். காசாவுக்கு எதிராக பயன்படுத்துவதற்கு இஸ்ரேலுக்கு ஆயுதங்கள் வழங்கக் கூடாது. பிரான்ஸ் எந்த ஒரு ஆயுதத்தையும் இஸ்ரேலுக்கு வழங்கவில்லை. மற்றவர்களும் நிறுத்த வேண்டும். லெபனானை மற்றொரு காசாவாக மாற்றுவதையும் தடுத்து நிறுத்த வேண்டும்' என, அவர் கூறினார்.இதற்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அவர் கூறியுள்ளதாவது:ஈரான் தலைமையில் பயங்கரவாதிகள் நடத்திவரும் காட்டுமிராண்டிதனத்துக்கு எதிராக நாங்கள் போராடி வருகிறோம். இதற்கு நாகரிக சமூகங்கள், நாடுகள் எங்களுக்கு ஆதரவாக இருக்க வேண்டும். ஆனால், பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான், எங்களுக்கு ஆயுதங்களை நிறுத்த வேண்டும் என்று கூறியுள்ளார். இது வெட்கக்கேடானது.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.