உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / லெபனானில் போராட்டக்காரர்கள் மீது இஸ்ரேல் துப்பாக்கிச் சூடு: 15 பேர் பலி

லெபனானில் போராட்டக்காரர்கள் மீது இஸ்ரேல் துப்பாக்கிச் சூடு: 15 பேர் பலி

மீஸ் உல்ஜபல்: இஸ்ரேலுக்கும், காசா பகுதியை கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ள ஹமாஸ் பயங்கரவாத அமைப்புக்கு இடையே 15 மாதங்களுக்கு மேலாக போர் நீடித்தது. ஹமாஸ் அமைப்புக்கு ஆதரவாக லெபனானில் இருந்து இயங்கும் ஹெஸ்பொல்லா பயங்கரவாத அமைப்பு இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது.இதையடுத்து லெபனான் மீதும் இஸ்ரேல் தாக்குதலை துவங்கியது. ஹெஸ்பொல்லா அமைப்பின் முக்கிய தலைவர்கள் கொல்லப்பட்டனர். அதன் பின் உலக நாடுகளின் தலையீட்டால் நவம்பரில் இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் ஏற்பட்டது. 60 நாட்களுக்குள் லெபனானிலிருந்து வெளியேறுவோம் என உடன்படிக்கையில் இஸ்ரேல் ஒப்புக்கொண்டது.ஆனால் 60 நாட்களை கடந்த பின்னும் தெற்கு லெபனானில் இருந்து இஸ்ரேல் படைகள் வெளியேறவில்லை. 'அந்த பகுதிகளில் லெபனான் ராணுவம் நிலைநிறுத்தப்படவில்லை. இதனால் மீண்டும் ஹெஸ்பொல்லா பயங்கரவாத அமைப்பினர் ஆதிக்கம் செலுத்தக் கூடும் என்பதால் வெளியேறவில்லை' என இஸ்ரேல் தரப்பில் கூறப்பட்டது.இஸ்ரேல் படைகள் வெளியேற வலியுறுத்தி தெற்கு லெபனானின் பல்வேறு கிராமங்களில் நேற்று போராட்டம் நடந்தது. அதில் ஒரு இடத்தில் போராட்டக்காரர்கள் இஸ்ரேல் வீரர்களை நோக்கி முன்னேறினர். அவர்களை நோக்கி சுட்டதில் இரண்டு பெண்கள் உட்பட 15 பேர் பலியாகினர்.இஸ்ரேல் ராணுவத்தினர் கூறுகையில், 'ஹெஸ்பொல்லா பயங்கரவாதிகளின் துாண்டுதலால் இந்த போராட்டம் நடந்தது. சிலர் ஹெஸ்பொல்லா அமைப்பின் கொடிகளை வைத்திருந்தனர். இஸ்ரேல் வீரர்களின் நிலைகளுக்கு அருகே வந்தவர்களிடம் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அதை மீறியும் முன்னேறியதால் துப்பாக்கியால் சுட்டோம்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ