உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / போர் நிறுத்த அமைதி திட்டத்துக்கு இஸ்ரேல் - ஹமாஸ் ஒப்புக்கொண்டன: அமைதிக்கான நோபல் பரிசுக்கு டிரம்ப் குறி

போர் நிறுத்த அமைதி திட்டத்துக்கு இஸ்ரேல் - ஹமாஸ் ஒப்புக்கொண்டன: அமைதிக்கான நோபல் பரிசுக்கு டிரம்ப் குறி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: அமைதிக்கான நோபல் பரிசு இன்று அறிவிக்கப்பட உள்ள நிலையில், தன் அமைதி திட்டத்தின் முக்கிய அம்சங்களுக்கு இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் ஒப்புக்கொண்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார். மேற்காசிய நாடான இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்தின் காசாவை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஹமாஸ் பயங்கரவாத அமைப்புக்கு இடையே, இரண்டு ஆண்டுகளாக போர் நடந்து வருகிறது. இந்தப் போரை முடிவுக்கு கொண்டுவர இஸ்ரேலுக்கு உலக நாடுகள் அழுத்தம் கொடுத்து வருகின்றன. இதன் ஒருபகுதியாக, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், 20 அம்ச அமைதி திட்டத்தை முன்மொழிந்தார். இதற்கு இஸ்ரேல் ஒப்புதல் அளித்திருந்த போதிலும், ஹமாஸ் குறிப்பிட்ட சில அம்சங்கள் குறித்து பேச்சு நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தது. இதையடுத்து, இருதரப்பும் மேற்காசிய நாடான எகிப்தில் பேச்சு நடத்தி வருகின்றன. இந்நிலையில் போரை நிறுத்தி, குறைந்தபட்சம் சில பிணைக் கைதிகளை விடுவிக்கும், அமைதி திட்டத்தின் முதல்கட்டத்திற்கு இஸ்ரேலும், ஹமாசும் ஒப்புக்கொண்டுள்ளதாக டிரம்ப் நேற்று தெரிவித்துள்ளார். மேலும், விரைவில் அனைத்து பிணைக் கைதிகளும் விடுவிக்கப்படுவர் என்றும், வலுவான, நீடித்த அமைதியை நோக்கிய முதல் படியாக, இஸ்ரேல் தங்கள் ராணுவத்தை விரைவில் திரும்பப்பெறும் என்றும், அனைவரும் நியாயமான முறையில் நடத்தப்படுவர் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், 'கடவுளின் உதவியுடன் நாங்கள் பிணைக் கைதிகள் அனைவரையும் வீட்டிற்கு கொண்டு வருவோம்' என தெரிவித்துள்ளார். ஏற்கனவே, இந்தியா - பாகிஸ்தான் உட்பட ஏழு போர்களை நிறுத்தி யுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூறி வருகிறார். நோபல் பரிசுகள் தற்போது அறிவிக்கப்பட்டு வருகின்றன. அமைதிக்கான நோபல் பரிசுக்குரியவர் இன்று அறிவிக்கப்பட உள்ளார். இதை குறிவைத்து, டிரம்ப் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், அமைதிக்கான அதிபர் என்று, டிரம்ப் படத்துடன் வெள்ளை மாளிகையும் செய்தி வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

பிரதமர் மோடி வரவேற்பு!

இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான வரலாற்று சிறப்பு மிக்க அமைதி திட்டத்தின் வெற்றிக்காக அமெரிக்க அதிபர் டிரம்பை வாழ்த்தியதாக பிரதமர் மோடி தன் வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது: நண்பர் டிரம்புடன் பேசினேன். வரலாற்று சிறப்பு மிக்க காசா அமைதி திட்டத்தின் வெற்றிக்காக அவரை வாழ்த்தினேன். இந்தியா - அமெரிக்கா இடையேயான வர்த்தக பேச்சின் முன்னேற்றம் குறித்தும் மதிப்பாய்வு செய்தோம். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

நம்பவே முடியவில்லை

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், தனியார் 'டிவி' ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது: காசா அமைதி ஒப்பந்தத்துக்கு பின் நெதன்யாகு என்னை தொடர்பு கொண்டு பேசினார். அப்போது அவர், 'என்னால் நம்பவே முடியவில்லை. எல்லாரும் இப்போது, இஸ்ரேலையும் என்னையும் விரும்புகின்றனர்' என்று கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

விஸ்வநாதன்
அக் 10, 2025 13:08

இஸ்ரேல் ஹமாஸ் ஒப்பந்தம் வர முக்கிய காரணம் மாண்புமிகு தமிழ்நாடு முதல்வரின் எச்சரிக்கை தான். மாண்புமிகு முதல்வர் அறிவித்த கண்டன தீர்மானம் தான் இஸ்ரேலை நடுங்க வைத்து சமாதானத்திற்கு வர வைத்தது. அதுதான் அமெரிக்க ஜனாதிபதிக்கே ஆச்சரியம் அளித்தது


Ravi Chandran. K, Pudukkottai
அக் 10, 2025 08:27

இந்தியா ,பாகிஸ்தான் போரை நிறுத்தியதற்கு பரிசு வேண்டுமானால் டிரம்பருக்கு கொடுக்கலாம்.


Nathan
அக் 10, 2025 04:31

பரிசீலனை தேதி முடிந்து விட்டது அடுத்த ஆண்டு பரிசு வழங்க பரிசீலனை செய்ய பரிந்துரை செய்யலாம்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை