வாஷிங்டன்: அமெரிக்காவில் அல் குவைதா பயங்கரவாதிகள் விமானங்களை கடத்தி, கட்டடங்கள் மீது மோதி நடத்திய தாக்குதலை போன்ற ஒரு மிகப் பெரும் தாக்குதலை இஸ்ரேல் மீது நடத்த, ஹமாஸ் பயங்கரவாதிகள் திட்டமிட்டிருந்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.கடந்தாண்டு அக்., 7ல், இஸ்ரேலுக்குள் நுழைந்து ஹமாஸ் பயங்கரவாதிகள் பெரும் தாக்குதலில் ஈடுபட்டனர்; அதே நேரத்தில் ஏவுகணைகளையும் செலுத்தி தாக்கினர். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=fytkn4so&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இதில், இஸ்ரேல் தரப்பில், 1,200 பேர் உயிரிழந்தனர்; மேலும், 250க்கும் மேற்பட்டோர் பிணைக் கைதிகளாக பிடித்து செல்லப்பட்டனர்.ஹமாஸ் பயங்கரவாதிகளின் இந்த திடீர் தாக்குதல், இஸ்ரேலையும், உலக நாடுகளையும் அதிர்ச்சி அடைய வைத்தது. ஆனால், இது திடீரென நடந்த தாக்குதல் அல்ல. இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக திட்டமிடப்பட்டு மேற்கொள்ளப்பட்டது என்ற ரகசிய தகவல் தற்போது வெளியாகி உள்ளது.இது குறித்து, அமெரிக்க ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்திகளில் கூறப்பட்டு உள்ளதாவது:அல் குவைதா பயங்கரவாதிகள், 2001 செப்., 11ல் விமானங்களை கடத்திச் சென்று, அமெரிக்கா, நியூயார்க் நகரின் இரட்டை கோபுர கட்டடங்களில் மோதினர். இதில், ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர்.இது போன்ற ஒரு மிகப் பெரும் தாக்குதலை இஸ்ரேல் மீது நடத்த ஹமாஸ் திட்டமிட்டது. இது தொடர்பாக, தனக்கு ஆதரவு அளிக்கும் ஈரானுடனும், அண்டை நாடான லெபனானில் இருந்து இயங்கும் ஹெஸ்பொல்லா பயங்கரவாத அமைப்புடனும் ஆலோசனை நடத்தியது. கடந்த 2021 ஜனவரியில் துவங்கிய இந்த ஆலோசனை மிகவும் ரகசியமாக வைக்கப்பட்டது. இது போன்ற தாக்குதல் நடத்தினால், இஸ்ரேல் பதிலடி கொடுக்கும் என்றும், அதை எதிர்கொள்ளும் வகையில் தயார் நிலையில் இருக்க தேவையானவற்றை செய்ய வேண்டும் என்றும் தீர்மானிக்கப்பட்டது. மேலும், இஸ்ரேல் மீது அவ்வப்போது நடத்தி வந்த சிறிய தாக்குதல்களை ஹமாஸ் நிறுத்தியது.தன் முழு கவனத்தையும், காசா பகுதி மேம்பாட்டில் செலுத்துவதாக அது காட்டியது.அதன்படி, 2021 துவக்கத்தில் இருந்து இஸ்ரேல் மீது ஹமாஸ் எந்த ஒரு தாக்குதலையும் நடத்தவில்லை. ஒரு கட்டத்தில், ஹமாஸ் அமைப்பால் நமக்கு இனி தொந்தரவு இல்லை என்ற மனநிலைக்கு இஸ்ரேல் சென்றது.அமெரிக்காவில் நடந்தது போன்ற தாக்குதலை நடத்துவதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டன.ஆனால், இதற்கு அதிகம் செலவாகும் என்பதால், ஈரானின் உதவியை ஹமாஸ் நாடியது. ஆனால், உடனடி உத்தரவாதம் கிடைக்கவில்லை.'த பிக் புராஜக்ட்' எனப்படும் மிகப் பெரும் திட்டம் என்ற பெயரில், இஸ்ரேல் மீதான தாக்குதலுக்கு ஹமாஸ் தொடர்ந்து தயாராகி வந்தது.கடந்த 2022 இறுதியிலேயே விமானம் வாயிலாக தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால், சற்று காத்திருக்கும்படி ஈரான் கூறியதால், அது ஒத்திவைக்கப்பட்டது.இந்நிலையில், கடந்தாண்டு மத்தியில், இஸ்ரேல் -- சவுதி அரேபியா இடையே நட்புறவு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் சூழ்நிலை ஏற்பட்டது. மேலும், இஸ்ரேல் புதிய வகை பாதுகாப்பு தளவாடத்தை தயார் செய்து வந்தது. உள்நாட்டில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு எதிராக கொந்தளிப்பு சூழ்நிலை இருந்தது.இது போன்ற காரணங்களால், இனியும் தாமதிக்க முடியாது என்பதால், கடந்தாண்டு அக்., 7ல் ஹமாஸ் தன் தாக்குதலை நடத்தியது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.