உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / இளைஞர்கள் போராட்டங்களால் மடகாஸ்கரில் கவிழ்ந்தது ஆட்சி நாட்டைவிட்டு அதிபர் ரஜோலினா ஓட்டம்

இளைஞர்கள் போராட்டங்களால் மடகாஸ்கரில் கவிழ்ந்தது ஆட்சி நாட்டைவிட்டு அதிபர் ரஜோலினா ஓட்டம்

அன்டனாநரிவோ:மடகாஸ்கரில், 'ஜென் இசட்' எனப்படும் இளம் தலைமுறையினர் நடத்திய போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில், அதைக் கட்டுப்படுத்த ராணுவம் மறுத்ததால், அந்நாட்டு அதிபர் ரஜோலினா தப்பியோடிவிட்டதாக கூறப்படுகிறது. கிழக்கு ஆப்ரிக்க நாடான மடகாஸ்கர், ஆப்ரிக்க கண்டத்தின் தென்கிழக்கு கடற்கரையில் அமைந்துள்ள தீவு நாடாகும். இது உலகின் நான்காவது பெரிய தீவு ஆகும். இங்கு பல வாரங்களாக இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இலங்கை, வங்கதேசம், நேபாளம் போன்ற நாடுகளில், உள்நாட்டில் நிலவும் பல்வேறு அவலங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து அரசுக்கு எதிராக இளைஞர்கள் போராட்டம் நடத்தினர். இதனால் ஈர்க்கப்பட்ட மடகாஸ்கர் இளைஞர்களும் தங்கள் நாட்டில் உள்ள அவலநிலைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். வறுமை, வாழ்வாதாரம், குடிநீர் மற்றும் மின்சார பற்றாக்குறை, ஊழல், மோசமான நிர்வாகம் மற்றும் அடிப்படை பொது சேவைகளின் நீண்டகால தோல்வி ஆகியவற்றுக்கு எதிராகவும், அந்நாட்டு அதிபர் பதவி விலகக் கோரியும் இளைஞர்கள் போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த செப்., 25ம் தேதி துவங்கிய இப்போராட்டம் தற்போது முழுமையான எழுச்சியாக மாறியுள்ளது. போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இளைஞர்களுடன், அந்நாட்டின் சக்திவாய்ந்த உயரடுக்கு ராணுவ பிரிவான சி.ஏ.பி.எஸ்.ஏ.டி.,யும் தங்களது ஆதரவை வெளிப்படையாக அறிவித்தது. போராட்டக்காரர்களுடன் ராணுவமும் இணைந்து கொண்டதையடுத்து, அதிபர் ஆண்ட்ரி ரஜோலினா, சட்ட விரோதமாக தன் ஆட்சியைக் கவிழ்க்க சதி நடப்பதாக கூறி நாட்டை விட்டு வெளியேறிவிட்டதாக கூறப்படுகிறது. ஆனால், அவர் தன் பதவியை ராஜினாமா செய்வது குறித்து எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி