டாக்கா : ராணுவ தளபதியுடன் மோதல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், வங்கதேசத்தின் இடைக்கால அரசின் தலைவர் முஹமது யூனுஸ் ராஜினாமா செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.நம் அண்டை நாடான வங்கதேசத்தில் மாணவர் அமைப்பினர் கடந்தாண்டு போராட்டத்தில் குதித்தனர். நாடு முழுதும் வெடித்த வன்முறையை அடுத்து, பிரதமர் பதவியை ராஜினாமா செய்த ஷேக் ஹசீனா, நாட்டைவிட்டு வெளியேறினார். அரசு கவிழ்ந்ததை அடுத்து, பொருளாதார நிபுணர் முஹமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைந்தது. அப்போது, அடுத்த ஆறு மாதத்திற்குள் பொது தேர்தல் நடத்தி, புதிய அரசை தேர்வு செய்ய முடிவு செய்யப்பட்டது. இதற்கிடையே, இடைக்கால அரசுக்கு ஆதரவு தெரிவித்து வந்த ராணுவ தளபதி வாக்கர் உஸ் ஜமானை ஆலோசிக்காமல், தேசிய பாதுகாப்பு ஆலோசகரை யூனுஸ் நியமித்தார். இது, இரு தரப்பினருக்கும் இடையே உரசலை ஏற்படுத்தியது. இதையடுத்து, உடனடியாக பொதுத் தேர்தலை அறிவிக்கும்படி, யூனுசுக்கு ராணுவ தளபதி ஜமான் அழுத்தம் கொடுத்து வருகிறார். இது தொடர்பாக பிற தளபதிகளுடன் ஆலோசிக்க அவசர கூட்டத்தை சமீபத்தில் கூட்டினார். பெரும்பாலான ராணுவ தளபதிகள், தேர்தல் நடத்த ஆதரவு தெரிவித்தனர். இது, முஹமது யூனுசுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.வங்கதேச தேசியவாத கட்சி உள்ளிட்ட கட்சிகளும் பொது தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் என வலியுறுத்தி வருவது, யூனுசுக்கான நெருக்கடியை அதிகரித்துள்ளது. இந்த சூழலில், மேயர் பதவி தொடர்பாக வங்கதேச தேசியவாத கட்சி, யூனுசுக்கு எதிராக டாக்காவில் போராட்டத்தில் குதித்துள்ளது. பிற மாணவர் அமைப்பினரும், அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர். இதுபோன்ற தொடர் நெருக்கடிகளால், இடைக்கால அரசின் தலைவர் பதவியை முஹமது யூனுஸ் ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து மாணவர்கள் தலைமையிலான தேசிய குடிமக்கள் கட்சி தலைவர் நித் இஸ்லாம் கூறுகையில், ''இந்த சூழலில் பணியாற்றுவது கடினம் என அவர் நினைக்கிறார். பிணைக் கைதியாக உள்ள என்னால் இனி வேலை செய்ய முடியாது என கூறியுள்ளார்,'' என, தெரிவித்தார்.
பின்னணி என்ன?
முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சி தடை செய்யப்பட்ட நிலையில், அடுத்த பெரிய கட்சியான வங்கதேச தேசியவாத கட்சி, பொதுத் தேர்தலில் வெற்றி பெறும் சூழல் உள்ளது. இதை விரும்பாத முஹமது யூனுஸ், பல்வேறு காரணங்களை கூறி தேர்தலை தள்ளி போடும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாக புகார் எழுந்துள்ளது. மாணவர்களை பயன்படுத்தி போராட்டங்களை துாண்டி, அதிகாரத்தில் தொடர்ந்து ஒட்டிக்கொள்ள முயற்சிப்பதாகவும் அவர் மீது குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது.