லாசேன்: லாசேன் 'டைமண்ட் லீக்' தொடரில் 'ஹாட்ரிக்' தங்கம் வெல்ல காத்திருக்கிறார் நீரஜ் சோப்ரா.இந்திய ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா 26. டோக்கியோ (தங்கம்), பாரிஸ் (வெள்ளி) என அடுத்தடுத்த ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றார். தொடையின் பின்பகுதியில் ஏற்பட்ட காயத்தால் அவதிப்பட்ட போதும், தொடர்ந்து போட்டியில் பங்கேற்கிறார். சுவிட்சர்லாந்தின் லாசேனில் இன்று நடக்கும் டையமண்ட் லீக் தடகளத்தில் சாதிக்க காத்திருக்கிறார். இங்கு, கடந்த 2022ல் 89.08 மீ., அடுத்து 2023ல் 87.66 மீ., துாரம் ஈட்டி எறிந்த நீரஜ் சோப்ரா, அடுத்தடுத்து தங்கப்பதக்கம் கைப்பற்றினார். இன்று மீண்டும் சிறப்பாக செயல்படும் பட்சத்தில், லாசேனில் 'ஹாட்ரிக்' தங்கம் வசப்படுத்தலாம். இவருக்கு பாரிஸ் ஒலிம்பிக்கில் வெண்கல பதக்கம் வென்ற கிரனடாவின் ஆண்டர்சன் பீட்டர்ஸ், டோக்கியோவில் வெள்ளி கைப்பற்றிய செக் குடியரசின் வாடில்ச் என, பாரிசில் 'டாப்-6' இடம் பெற்ற வீரர்களில் ஐந்து பேர், சவால் கொடுக்க உள்ளனர்.ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற பாகிஸ்தான் வீரர் அர்ஷத் நதீம் மட்டும் இப்போட்டியில் பங்கேற்கவில்லை. இருப்பினும் இந்த சீசன் முழுவதும் சிறப்பாக செயல்படும் நீரஜ் சோப்ரா, முதலிடம் பெற்று தங்கம் வசப்படுத்தலாம். இன்று இரவு 12.22 மணிக்கு இப்போட்டி நடைபெற உள்ளது. 'டாப்-6' முக்கியம்
2024ல் பல்வேறு டைமண்ட் லீக் போட்டியில் பங்கேற்று, புள்ளிப்பட்டியலில் 'டாப்-6' இடம் பெறும் பட்சத்தில், அடுத்து பிரஸ்சல்சில் (பெல்ஜியம், செப். 14) நடக்கவுள்ள டைமண்ட் லீக் தொடரின் பைனலில் பங்கேற்கலாம்.நீரஜ் சோப்ராவை பொறுத்தவரையில் தற்போது 7 புள்ளியுடன் 4வது இடத்தில் உள்ளார். இன்று சாதித்தால் 'டைமண்ட் பைனல்' வாய்ப்பை ஏறக்குறைய உறுதி செய்யலாம். 'டாப்-3' இடத்தில் வாடில்ச் (14 புள்ளி), ஆண்டர்சன் (13), ஜெர்மனியின் ஜூலியன் வெப்பர் (8) உள்ளனர். பாகிஸ்தான் வீரர் அர்ஷத் நதீம் (6) 6வது இடத்தில் உள்ளார்.