காத்மாண்டு : சமூக ஊடகங்களுக்கு அரசு தடை விதித்த கோபத்தில் நேபாள நாட்டு பார்லிமென்ட் வாயிலை எரித்து மாணவர்கள் பெரும் கலவரத்தில் ஈடுபட்டனர். தலைநகர் காத்மாண்டுவில் நடந்த இந்த கலவரத்தில், 20 பேர் உயிரிழந்தனர். மாணவர்கள் போராட்டம் எதிரொலியால் அந்நாட்டு ஜனாதிபதி மற்றும் பிரதமர் பதவியை ராஜினாமா செய்தனர். நம் அண்டை நாடான நேபாளத்தில், சமூக ஊடக தளங்களை ஒழுங்குபடுத்த விதிமுறைகளை உருவாக்குமாறு அந்நாட்டின் உச்ச நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து, புதிய விதிமுறைகளை உருவாக்கிய அரசு, அவ்விதிகளின் கீழ் சமூக ஊடகங்கள் தங்கள் நிறுவனங்களை அரசிடம் பதிவு செய்ய ஒரு வாரம் அவகாசம் தந்தது.இந்த அவகாசம் கடந்த 5ம் தேதியுடன் முடிவடைந்தது. அரசிடம் பதிவு செய்யாததால், 'வாட்ஸாப், இன்ஸ்டாகிராம், பேஸ்புக், யு டியூப், எக்ஸ்' உட்பட, 26 பிரபல சமூக ஊடகங்களை முடக்கி நேபாள அரசு நடவடிக்கை எடுத்தது.
ஊரடங்கு உத்தரவு
அதேவேளையில் 'டிக்டாக், நிம்பஸ், போபோ லைவ், வைபர்' போன்ற சில தளங்கள் ஏற்கனவே பதிவு செய்திருந்ததால் அவை தொடர்ந்து செயல்பட்டு வருகின்றன.வெறுப்பு பேச்சுக்கள், வதந்திகள், இணைய குற்றங்களை கட்டுப்படுத்தவே இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு விளக்கமளித்தது. இருப்பினும், இந்தத் தடை, நேபாள மக்களிடையே, குறிப்பாக இளைஞர்களிடையே பெரும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.இதையடுத்து, அரசுக்கு எதிராக ஆயிரக்கணக்கான இளைஞர்கள் தலைநகர் காத்மாண்டுவில் திரண்டு நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், காத்மாண்டுவில் உள்ள பார்லிமென்டை நோக்கி பேரணியாக செல்ல முயன்றனர். தடுப்புகளை மீறி செல்ல முயன்றபோது, ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே மோதல் வெடித்தது. இதையடுத்து, கூட்டத்தை கலைக்க போராட்டக்காரர்கள் மீது போலீசார் கண்ணீர் புகை குண்டு மற்றும் ரப்பர் தோட்டாக்களை பயன்படுத்தினர். மேலும் கண்டதும் சுடுவதற்கு ராணுவம் உத்தரவிட்டது.காத்மாண்டுவில் துவங்கிய போராட்டம் பிற பகுதிகளுக்கு பரவியதை தொடர்ந்து, அப்பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. போராட்டங்கள் வன்முறையாக மாறியதைத் தொடர்ந்து, சில பகுதிகளில் ராணுவம் குவிக்கப்பட்டது.நாடு முழுதும் நடந்த போராட்டத்தில், போலீசாருடன் நடந்த மோதலில் 19 பேர் பலியாகினர்; 250க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அரசு தன் நடவடிக்கைகளுக்கு நியாயம் கற்பித்தாலும், மனித உரிமை அமைப்பினர் மற்றும் ஊடகவியலாளர்கள் இதை கடுமையாக விமர்சித்துள்ளனர். மேலும், இது கருத்து சுதந்திரத்துக்கு எதிரான அச்சுறுத்தல் என்றும் தெரிவித்துள்ளனர். சமூக ஊடகங்கள் மீதான தடையை மட்டும் மையமாகக் கொண்டு இப்போராட்டங்கள் நடைபெறுவதாக கூறப்பட்டாலும், உண்மையில் அந்நாட்டு அரசின் நிர்வாக சீர்கேடு மற்றும் ஊழல்கள் மீது மக்கள் கொண்ட அதிருப்தியின் அடையாளமாகவே பார்க்கப்படுகிறது.வாபஸ்
போராட்டங்களைத் தொடர்ந்து, சமூக ஊடகங்களுக்கு தடை விதிக்கும் உத்தரவை திரும்பப் பெறுவவதாக அந்நாட்டு அரசு அறிவித்தது.இருப்பினும் மாணவர்கள் போராட்டம் குறையவில்லை. இரண்டாவது நாளாக தொடர்ந்தது. ஜனாதிபதியின் வீட்டுக்குள் நுழைந்து ராஜினாமா!
போராட்டத்தை அடுத்து, நேபாள பிரதமர் சர்மா ஒலி நேற்று மாலை அமைச்சரவையை கூட்டி ஆலோசித்தார். அதேநேரத்தில் போராட்டங்களை தொடர்ந்து, நேபாள உள்துறை அமைச்சர் ரமேஷ் லேகாக், போராட்டத்தின் போது ஏற்பட்ட உயிரிழப்புக்கு தார்மீக பொறுப்பேற்று தன் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார்.வேளாண் அமைச்சர் ராம்நாத் அதிகாரி, நீர்வளத்துறை அமைச்சர் யாதவ் ஆகியோரும் ராஜினாமா செய்தனர்.போராட்டக்காரர்கள் ஜனாதிபதி ராம் சந்திரி பவுடெல் இல்லத்தை சூறையாடி இருக்கின்றனர். ராஜினாமா செய்த உள்துறை அமைச்சர் ரமேஷ் லேக்கக் வீட்டையும் போராட்டக்காரர்கள் தீ வைத்து எரித்துள்ளனர்.முன்னாள் பிரதமர்கள் புஷ்பகமல் தாஹல் என்னும் பிரசந்தா மற்றும் ஷேர் பகதூர் டியுபா, எரிசக்தி துறை அமைச்சர் தீபக் கட்கா ஆகியோர் இல்லங்களும் போராட்டக்காரர்களின் பிடியில் இருந்து தப்பவில்லை. அமைச்சர்கள் பலரும், ராணுவ ஹெலிகாப்டர்களில் மீட்கப்படுகின்றனர். பார்லிமென்ட்டுக்கும் போராட்டக்காரர்கள் தீவைத்தனர். இதனால் அங்கு பதற்றம் அதிகரித்து காணப்படுகிறது.அந்நாட்டு முன்னாள் பிரதமர் பிரசந்தா, நிதியமைச்சர் பிஷ்ணு பிரசாத் பவுடேல் ஆகியோரை மாணவர்கள் தாக்குதல் நடத்தினர். முன்னாள் பிரதமர் ஒருவரின் மனைவி மீதும் தீ வைத்தனர். சர்மா ஒலிக்கு சொந்தமான வீட்டிற்கு தீவைத்து எரித்தனர். இதனால், அந்நாட்டில் பல இடங்களில் புகை மூட்டமாக காணப்படுகிறது.நிலைமை கை மீறி போனதைத் தொடர்ந்து, ஜனாதிபதி பதவியில் இருந்து ராம் சந்திரி பவுடெல்லும் பிரதமர் பதவியில் இருந்து சர்மா ஒலியும் ராஜினாமா செய்தனர். இதனால், அந்நாட்டில் அரசியல் குழப்பம் நிலவுகிறது. இதனையடுத்து அதிகாரத்தை கையில் எடுத்துள்ள ராணுவம், அந்நாட்டு அமைச்சர்கள் அனைவரையும் ராஜினாமா செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.மேலும், போராட்டம் நடத்தி வரும் மாணவர்கள் கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும் எனவும் போராட்டத்தில் ஈடுபட வேண்டாம். அனைத்து பிரச்னைகளுக்கும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் எனவும் ராணுவம் வேண்டுகோள் விடுத்துள்ளது.