UPDATED : செப் 28, 2024 06:24 AM | ADDED : செப் 28, 2024 12:27 AM
கொழும்பு: இலங்கைக்கு பயணிப்பவர்களுக்கு, 'அவுட்சோர்சிங்' முறையில் விசா வழங்கும் நடைமுறையை மேற்கொள்ளும் இந்திய நிறுவனங்களை தணிக்கை செய்ய இலங்கை அரசு உத்தரவிட்டுள்ளது.நம் அண்டை நாடான இலங்கையில், தேசிய மக்கள் சக்தி கூட்டணியின் அனுர குமார திசநாயகே அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றதை அடுத்து, புதிய அதிபராக அவர் சமீபத்தில் பொறுப்பேற்றார். இதையடுத்து, இலங்கை வருபவர்களுக்கு நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் பழைய விசா நடைமுறை அமல்படுத்தப்பட்டது. ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டில் உள்ள துபாயை தலைமையிடமாக வைத்து செயல்பட்டு வந்த வி.எப்.எஸ்., நிறுவனத்தால் மேற்கொள்ளப்பட்ட விசா வழங்கும் நடைமுறையில், முறைகேடு இருப்பதாக புகார் எழுந்ததை அடுத்து இந்த மாற்றம் செய்யப்பட்டது.இந்த முறைகேடு தொடர்பாக, அந்த நிறுவனத்தின் செயல்பாடுகளில் ஆய்வு மேற்கொள்ள இலங்கை அரசு உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து, இலங்கைக்கு அவுட்சோர்சிங் முறையில் விசா வழங்கும் இந்திய நிறுவனங்களான ஜி.பி.எஸ்., டெக்னாலஜி, ஐ.வி.எஸ்., குளோபல், எப்.இசட்.சி.ஓ., ஆகியவற்றிலும் ஆய்வு மேற்கொள்ள உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை, அந்நாட்டு பொது பாதுகாப்பு அமைச்சர் விஜிதா ஹெராத் நேற்று உறுதி செய்தார். இது தொடர்பாக கடந்த ஜூலை மாதம் பிறப்பிக்கப்பட்ட உத்தரவை அமல்படுத்தாமல் இருந்த இலங்கை குடியுரிமை வழங்கல் துறையின் கட்டுப்பாட்டு இயக்குனர் ஹர்ஷா இலுக்பாடியா கைது செய்யப்பட்டதை அடுத்து, இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அவர் தெரிவித்தார்.