உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / பஹல்காம் தாக்குதல் குற்றவாளிகளை உடனே தண்டிக்க வேண்டும்: குவாட்

பஹல்காம் தாக்குதல் குற்றவாளிகளை உடனே தண்டிக்க வேண்டும்: குவாட்

வாஷிங்டன்: 'ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில் நடந்த தாக்குதலில் ஈடுபட்ட குற்றவாளிகள், திட்டமிட்டவர்கள் மற்றும் நிதியுதவி அளித்தவர்களை உடனடியாக நீதியின் முன் நிறுத்தி தண்டிக்க வேண்டும்' என, 'குவாட்' வெளியுறவு அமைச்சர்கள் கூட்டறிக்கை வெளியிட்டனர்.'குவாட்' அமைப்பு என்பது இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் ஜப்பான் ஆகிய நான்கு நாடுகளின் கூட்டணி. இந்தோ - -பசிபிக் பிராந்தியத்தில் பாதுகாப்பு, பொருளாதாரம் மற்றும் ஒத்துழைப்பை மேம்படுத்துவதே இந்த அமைப்பின் நோக்கம்.'குவாட்' அமைப்பின் வெளியுறவு அமைச்சர்கள் சந்திப்பு நேற்று முன் தினம் அமெரிக்காவின் வாஷிங்டனில் நடந்தது. இதில் நம் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ, ஆஸ்திரேலிய வெளியுறவு அமைச்சர் பென்னி வோங் மற்றும் ஜப்பானிய வெளியுறவு அமைச்சர் தகேஷி இவாயா ஆகியோர் பங்கேற்றனர்.இந்த ஆண்டு இறுதியில் இந்தியாவில் நடக்கவுள்ள, 'குவாட்' கூட்டமைப்பின் வருடாந்திர உச்சி மாநாட்டிற்கான திட்டத்தை இதில் உறுதிப்படுத்தினர். நிகழ்ச்சிக்கு பின் குவாட் அமைச்சர்கள் சார்பில் வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் குற்றவாளிகள், அதற்கு திட்டமிட்டவர்கள் மற்றும் நிதியளித்தவர்களை உடனடியாக நீதியின் முன் நிறுத்த வேண்டும். இது தொடர்பாக ஐ.நா., உறுப்பு நாடுகள் சர்வதேச சட்டத்தின் கீழ், தங்கள் கடமைகளுக்கு ஏற்ப மற்றும் ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் தீர்மானங்களுக்கு இணங்க ஒத்துழைக்க வேண்டும். தென் சீன கடலில் எந்தவொரு ஒருதலைப்பட்சமான செயல்களையும், அழுத்தங்கள் மூலமாக நிலைமையை மாற்ற முயற்சிப்பதையும் நாங்கள் கடுமையாக எதிர்க்கிறோம்.ஆசியான் முயற்சிகளுக்கு எங்கள் ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்துகிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை