உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / பாகிஸ்தானை புரட்டி போடும் பருவமழை; 24 மணிநேரத்தில் 200 பேர் பலி

பாகிஸ்தானை புரட்டி போடும் பருவமழை; 24 மணிநேரத்தில் 200 பேர் பலி

இஸ்லாமாபாத்; பாகிஸ்தானில் பருவமழைக்கு கடந்த 24 மணி நேரத்தில் 200க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். பாகிஸ்தானில் கடந்த சில நாட்களாக இடைவிடாது கொட்டி வரும் பருவமழை பெரும் சேதத்தை ஏற்படுத்தி வருகிறது. தொடரும் மழையால் உயிரிழப்புகளும் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன. மலைப்பகுதியான கைபர் பக்துன்க்வா மாகாணம் பருவமழையில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.அங்கு மட்டுமே 110 பேர் மழைக்கு பலியாகி இருக்கின்றனர். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். வடமேற்கில் உள்ள புனேரில், ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சிக்கி குறைந்தது 56 பேர் இறந்துள்ளனர். மழையுடன் வடக்கு பாகிஸ்தானில் நிலச்சரிவுகளும் ஏற்பட்டு வருவதால் பலி எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டே வருகிறது.வடமேற்கு பஜௌர் மாவட்டத்தில் மேகவெடிப்பின் போது பல வீடுகள் அடித்துச் செல்லப்பட்டன. பலர் அங்கு சிக்கி தவிப்பதாக பக்துன்க்வாவில் உள்ள பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவித்துள்ளது. பருவமழை மற்றும் பாதிப்புகள் குறித்து பேரிடர் மேலாண்மை மைய அதிகாரிகள் கூறியதாவது; வழக்கத்துக்கு மாறான இந்த பருவமழையால் 320க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அவர்களில் பாதிபேர் குழந்தைகள். குறிப்பாக கடந்த 24 மணி நேரத்தில் பெய்த கனமழையால் கிட்டத்தட்ட 200 பேர் பலியாகி உள்ளனர். மீட்புப் பணிகள் நடந்து வருகின்றன.இவ்வாறு அவர்கள் கூறினர். இதனிடையே, பஜௌர் மாவட்டம் பாண்டியாலி பகுதியில் மீட்பு பணிகளில் ஈடுபட்டிருந்த எம்ஐ-17 ரக ஹெலிகாப்டர், விபத்தில் சிக்கியது. இதில் 5 பேர் பலியாகினர். விபத்துக்கு மோசமான வானிலையா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பதை கண்டறிய வேண்டும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை