போர்ச்சுகலில் சொத்துக்கள் வாங்கி குவித்துள்ள பாக்., உயரதிகாரிகள்
இஸ்லாமாபாத்:'பாகிஸ்தான் உயரதிகாரிகளில் பாதி பேர் கருப்பு பணத்தில் ஐரோப்பிய நாடான போர்ச்சுக்கலில் சொத்துக்கள் வாங்கி குவித்துள்ளனர்' என அந்நாட்டின் ராணுவ அமைச்சர் கவாஜா ஆசிப் அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ளார். இது குறித்து சமூக வலைதளத்தில் அவர் வெளியிட்ட பதிவில் கூறியுள்ளதாவது: நம் நாட்டின் பாதிக்கும் மேற்பட்ட உயரதிகாரிகள் ஐரோப்பிய நாடான போர்ச்சுக்கலில் சொத்துக்கள் வாங்கி குவித்துள்ளனர். அந்நாட்டின் குடியுரிமை பெற முயற்சித்து வருகின்றனர். அவர்கள் அனைவரும் பிரபலமான அதிகாரிகள். பல நுாறு கோடி ரூபாய் பணத்தை சுருட்டிய அவர்கள் ஓய்வு வாழ்க்கையை சொகுசாக வாழ நாட்டை விட்டு வெளியேற உள்ளனர். பஞ்சாப் முன்னாள் முதல்வர் உஸ்மான் பஸ்தாருக்கு நெருக்கமான அதிகாரி தன் மகளின் திருமணத்திற்கான பரிசு என்ற பெயரில் 400 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளார். இது தான் பாகிஸ்தானின் நிலைமை. அவர்கள் மிச்சம் வைப்பதே அரசியல்வாதிகளுக்கு. ஆனால் அதிகாரிகள் தப்பித்து கொள்கிறார்கள். அரசியல்வாதிகள் பொது மக்களிடம் மாட்டிக்கொள்கிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.