குரோஷியா சென்றார் பிரதமர் மோடி விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு
ஜாக்ரெப்: மூன்று நாள் அரசு முறை பயணத்தின் இறுதி கட்டமாக, ஐரோப்பிய நாடான குரோஷியாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி நேற்று சென்றடைந்தார். மத்திய கிழக்கு நாடான சைப்ரஸ், வட அமெரிக்க நாடான கனடா, ஐரோப்பிய நாடான குரோஷியா ஆகியவற்றுக்கு பிரதமர் மோடி அரசு முறை சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். சைப்ரசில் நடந்த வர்த்தக மாநாட்டில் பங்கேற்ற மோடி, கனடாவில் நடந்த 'ஜி - 7' உச்சி மாநாட்டில் பங்கேற்றார். பின்னர், விமானம் வாயிலாக நேற்று குரோஷியா சென்றடைந்தார். அங்குள்ள ஜாக்ரெப் விமான நிலையத்தில், அரசு சார்பில் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. குரோஷியா பிரதமர் ஆண்ட்ரெஜ் ப்ளென்கோவிக், விமான நிலையத்தில் பிரதமர் மோடியை வரவேற்றார். இது குறித்து, அவர் சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், 'ஜாக்ரெபிற்கு வருகை தந்த இந்திய பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்கிறோம். இந்திய பிரதமர் முதல் முறையாக குரோஷியா வந்துள்ளார். ஒரு முக்கியமான புவிசார் அரசியல் தருணத்தில் இந்த வருகை நிகழ்ந்துள்ளது' என தெரிவித்துள்ளார். விமான நிலையத்தில் அளிக்கப்பட்ட உற்சாக வரவேற்புக்கு, பிரதமர் மோடி சமூக வலைதள பக்கத்தில் நன்றி கூறியுள்ளார். ஜாக்ரெபில் உள்ள ஹோட்டலுக்கு சென்ற மோடிக்கு, அங்குள்ள இந்திய வம்சாவளியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். 'பாரத் மாதா கி ஜே, வந்தே மாதரம்' முழக்கங்களுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. பின், இந்திய பாரம்பரியத்தை விளக்கும் நடன நிகழ்ச்சியை மோடி கண்டு ரசித்தார். குரோஷியா பயணத்தின்போது அந்நாட்டு அதிபர் ஜோரன் மிலனோவிக், பிரதமர் ப்ளென்கோவிக் உள்ளிட்டோரை பிரதமர் மோடி சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது, இந்தியா -- குரோஷியா இடையே பரஸ்பர நலன் சார்ந்த துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவது தொடர்பாக பேச்சு நடத்தப்பட்டது.