ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்க சீனா செல்கிறார் பிரதமர்
பீஜிங், ஆக. 7-ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாட்டில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி சீனா செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சீனா மற்றும் ரஷ்யா இணைந்து, எஸ்.சி.ஓ., எனப்படும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பை, 2001ல் துவக்கின. பிராந்திய பாதுகாப்பு, பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் அரசியல் நிலைத்தன்மை ஆகியவை இந்த அமைப்பின் முக்கிய நோக்கம். இந்த அமைப்பில் இந்தியாவும் நிரந்தர உறுப்பினராக உள்ளது. சீனாவின் தியான்ஜினில், வரும் 31 மற்றும் செப்டம்பர் 1 ஆகிய இரு நாட்கள் 25வது ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு நடக்க உள்ளது. ஏற்கனவே இந்த அமைப்பின் அமைச்சர்கள் மாநாடு சமீபத்தில் நடந்தது. இதில் நம் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் பங்கேற்றனர். இந்நிலையில், பிரதமர் மோடி இந்த மாநாட்டில் பங்கேற்க சீனா செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த, 2020ல் லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் நடந்த இந்திய -- சீன ராணுவ வீரர்களின் மோதலுக்கு பின் பிரதமர் மோடியின் முதல் சீன பயணம் இது. இரு தரப்பும் எல்லைகளில் இருந்து படைகளை விலக்கிக் கொள்வதற்கு கடந்தாண்டு முன்வந்தன. அதைத் தொடர்ந்து, கடந்தாண்டு அக்டோபரில், ரஷ்யாவில் நடந்த பிரிக்ஸ் மாநாட்டின்போது, சீன அதிபர் ஷீ ஜின்பிங்கை, பிரதமர் மோடி சந்தித்து பேசினார். வரும் 29ம் தேதி இரு நாள் பயணமாக ஜப்பான் செல்லும் மோடி, அங்கிருந்து சீனா செல்ல உள்ளார். தற்போது இந்தியாவுக்கு அமெரிக்கா 50 சதவீத வரி விதித்துள்ள நிலையில், பிரதமர் மோடியின் இந்த சீன பயணம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.