மாஜி பிரதமரை கைது செய்யக்கோரி நேபாளத்தில் போராட்டம்: இளைஞர்கள் கைது
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
காத்மாண்டு: நேபாளத்தின் முன்னாள் பிரதமர் சர்மா ஒலி மற்றும் முன்னாள் உள்துறை அமைச்சர் ரமேஷ் லேகாக்கை கைது செய்யக் கோரி போராட்டம் நடத்திய இளைஞர்களை போலீசார் கைது செய்தனர். நம் அண்டை நாடான நேபாளத்தில், ஊழல் மற்றும் சமூக வலைதளங்களுக்கு தடை விதிக்கப்பட்டதை எதிர்த்து, அந்நாட்டைச் சேர்ந்த, 'ஜென் இசட்' எனும் இளம் தலைமுறையினர் கடந்த மாதம் அரசுக்கு எதிராக நடத்திய போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இதை கட்டுப்படுத்த மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் போது, 76 பேர் கொல்லப்பட்டனர். இதையடுத்து, அந்நாட்டின் அப்போதைய பிரதமர் கே.பி.சர்மா ஒலி, தன் பதவியை ராஜினாமா செய்ததுடன், அரசையும் கலைத்தார். இதையடுத்து, அந்நாட்டின் முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி சுசீலா இடைக்காலபிரதமராக பொறுப்பேற்றுக் கொண்டார். இந்நிலையில், போராட்டத்தில் கொல்லப்பட்ட 76 பேரின் உயிரிழப்புக்கு முன்னாள் பிரதமர் சர்மா ஒலி மற்றும் முன்னாள் உள்துறை அமைச்சர் ரமேஷ் லேகாக் தான் பொறுப்பு என, போராட்டக்குழுவினர் போலீசில் புகாரளித்தனர். இதையடுத்து, அவர்கள் இருவர் மீது போலீசார் எப்.ஐ.ஆர்., பதிவு செய்தனர். இந்நிலையில், முன்னாள் பிரதமரையும், முன்னாள் உள்துறை அமைச்சரையும் கைது செய்யக்கோரி, நேபாளத்தின் மைதிகாரில் இளைஞர்கள் நேற்று போராட்டம் நடத்தினர். இதையடுத்து அவர்கள் , போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.