புதுடில்லி: ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் இன்று டில்லி வரவுள்ள நிலையில், வழக்கத்திற்கு மாறாக மூன்று நாடுகளின் துாதர்கள் கூட்டாக சேர்ந்து, பிரபல நாளிதழில் கட்டுரை எழுதி உள்ளனர். அதில், 'உக்ரைனுக்கு எதிரான போரை நிறுத்த ரஷ்யாவுக்கு ஆர்வமில்லை' என, விமர்சித்திருப்பது, சர்வதேச அரசியலில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
தீர்மானம்
ரஷ்யா - உக்ரைன் இடையே கடந்த நான்கு ஆண்டுகளாக போர் நீடித்து வருகிறது. இதை நிறுத்த, அமெரிக்க அதிபர் டிரம்ப் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறார். இதற்காக இரு நாடுகளும் ஒப்புக் கொள்ளும் வகையில், ஒரு தீர்மானத்தை கொண்டு வந்துள்ளார். இதை உக்ரைன் ஏற்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தி வருகிறார். இந்தச் சூழலில், இரு நாள் அரசு முறை பயணமாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் இன்று டில்லி வருகிறார். அமெரிக்காவுடனான வர்த்தக உறவு பாதிக்கப்பட்டிருக்கும் சூழலில், ரஷ்ய அதிபர் புடினின் வருகை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. எரிசக்தி, விண்வெளித் துறை, ராணுவம், விவசாயம் உட்பட பல்வேறு முக்கிய துறைகளில் இரு நாட்டுக்கும் இடையே கூட்டு திட்டங்கள் நிறைவேற்றுவதற்கு புடினின் வருகை பெரும் உதவியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தச் சூழலில், 'உக்ரைன் உடனான போரை ரஷ்ய அதிபர் புடின் நிறுத்திக்கொள்ள வேண்டும்' என, ஜெர்மனி, பிரான்ஸ் மற்றும் பிரிட்டன் நாடுகள் இணைந்து கூட்டாக வலியுறுத்தியுள்ளன. ஜெர்மன் துாதர் பிலிப் அகெர்மன், பிரான்ஸ் துாதர் தியரி மத்தோ மற்றும் பிரிட்டன் துாதர் லிண்டி கேம்ரூன் ஆகியோர், பிரபல ஆங்கில நாளிதழில் எழுதிய கட்டுரை நேற்று வெளியாகி உள்ளது. 'உக்ரைனுக்கு எதிரான போர் நிறுத்தப்பட வேண்டும் என உலகமே விரும்புகிறது; ஆனால், ரஷ்யாவோ அமைதி நடவடிக்கைக்கு முக்கியத்துவம் தர மறுக்கிறது' என்ற தலைப்புடன் அந்த கட்டுரை எழுதப்பட்டு உள்ளது. அதில், 'உண்மையிலேயே அமைதியை விரும்புபவர்கள், இப்படி நடந்து கொள்ள மாட்டார்கள். அமைதி பேச்சுக்கு ரஷ்ய அதிபர் புடின் ஆர்வம் காட்டாமல் இருக்கிறார். ' நாங்கள் உக்ரைனுக்கு தேவையான ராணுவ பலத்தை வழங்கி, முழு ஆதரவு அளிப்போம். உக்ரைன் மக்களையும், அதன் இறையாண்மையையும் காப்போம்' என குறிப்பிடப்பட்டுள்ளது. அனுமதிக்க முடியாது புடின், நம் நாட்டிற்கு வரவுள்ள நிலையில், இப்படியொரு கட்டுரை நாளிதழில் வெளியானது சர்வதேச அரசியலில் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. இதுகுறித்து நம் வெளியுறவு அமைச்சக அதிகாரிகள் கூறுகையில், 'புடின் வருகையை எதிர்பார்த்தே இப்படியொரு கட்டுரை வெளியாகி இருப்பதாக தோன்றுகிறது. இது வழக்கத்திற்கு மாறானது. ' ரஷ்யாவுடனான உறவு தொடர்பாக பிற நாடுகள் நமக்கு பாடம் எடுப்பதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. இந்த விவகாரம் குறித்து ஆய்வு செய்து வருகிறோம்' என தெரிவித்துள்ளனர். ஐரோப்பிய நாட்டு துாதர்கள் சர்ச்சை கட்டுரை