உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / அமெரிக்காவுடனான அணுஆயுத ஒப்பந்தம்; விலகுவதாக ரஷ்யா அதிரடி அறிவிப்பு

அமெரிக்காவுடனான அணுஆயுத ஒப்பந்தம்; விலகுவதாக ரஷ்யா அதிரடி அறிவிப்பு

மாஸ்கோ:அணுசக்தி நீர்மூழ்கி கப்பல்களை அமெரிக்கா நிலைநிறுத்தியதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, 1987ல் சோவியத் யூனியன் காலத்தில் போடப்பட்ட அணுஆயுத ஒப்பந்தத்தில் இருந்து விலகுவதாக ரஷ்யா அறிவித்துள்ளது. கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்த போர், மூன்றாவது ஆண்டை நெருங்கியுள்ளது. இதில், உக்ரைனுக்கு அமெரிக்கா ஆதரவு தெரிவித்துள்ளது. பொருளாதார தடை இதற்கிடையே, போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான முயற்சிகளில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ஈடுபட்டார். ஆனால், இதற்கான நிபந்தனைகளை ஏற்க, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் மறுத்தார். இதையடுத்து, ரஷ்யா மீது கடுமையான பொருளாதார தடை விதிப்பதாக டிரம்ப் மிரட்டல் விடுத்தார். மேலும், ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகள் மீது கூடுதல் வரி விதிப்பதாகவும் டிரம்ப் எச்சரித்தார். இதற்கிடையே, ரஷ்யாவை மிரட்டும் வகையில், அதன் கடல் பகுதிக்கு, இரண்டு அணு ஆயுத நீர்மூழ்கி கப்பல்களை அமெரிக்கா அனுப்பியது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், அமெரிக்கா வுடனான அணு ஆயுத ஒப்பந்தத்தில் இருந்து விலகுவதாக, ரஷ்யா நேற்று அறிவித்தது. கடந்த, 1987ல் அமெரிக்கா மற்றும் அப்போதைய சோவியத் யூனியன் இடையே ஐ.என்.எப்., எனப்படும் நடுத்தர தொலைவு அணுஆயுத ஏவுகணை பயன்பாடு தொடர்பான ஒப்பந்தத்திலிருந்து விலகுவதாக ரஷ்யா நேற்று அறிவித்துள்ளது. அச்சுறுத்தல் இந்த ஒப்பந்தம், 1987ல் சோவியத் யூனியனின் அப்போதைய தலைவர் மிகைல் கோர்பச்சேவ் மற்றும் அமெரிக்க முன்னாள் அதிபர் ரொனால்ட் ரீகன் ஆகியோரால் கையெழுத்தானது. இது, 500 முதல் 5,500 கி.மீ., துாரம் வரை செலுத்தக் கூடிய அனைத்து விதமாக அணு ஆயுதங்களை பயன்படுத்துவதை நிறுத்துவதாகும். மேலும், ஐரோப்பாவில் அணு ஆயுதப் போர் அச்சுறுத்தலைக் குறைக்கும் ஏவுகணைகளை தயாரிப்பதற்கும் தடை விதித்தது. கடந்த, 2019ல் டிரம்ப்பின் முதல் பதவிக்காலத்தில், ரஷ்யாவின் விதிமீறல்களை காரணம் காட்டி, அமெரிக்கா இந்த ஒப்பந்தத்திலிருந்து விலகியது. ஆனால், அமெரிக்கா அத்தகைய ஏவுகணை தாக்குதல் நடத்தாத வரை, நாங்களும் ஏவுகணைகளை நிலைநிறுத்த மாட்டோம் என ரஷ்யா தனக்குத்தானே தடை விதித்துக்கொண்டது. இந்த நிலையில், அமெரிக்கா தற்போது தங்களுக்கு எதிராக அணுசக்தி நீர்மூழ்கி கப்பல் களை அனுப்பி இருப்பதால், தங்கள் முடிவை திரும்பப்பெறுவதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. இந்தோ - பசிபிக் பிராந்தியத்தில் நீடிக்கும் போர் அச்சுறுத்தல், ஒப்பந்தத்தை மீறி ஏவுகணைகளை நிலைநிறுத்துவதற்கு வழிவகுத்துள்ளதாக ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவின் புதிய காலனித்துவ கொள்கை

வளர்ந்து வரும் சர்வதேச அரங்கில், அதன் ஆதிக்கம் ஒடுக்கப்படுவதை அமெரிக்காவால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. தானாகவே முடிவு எடுத்து செயல்படும், சுயாதீன நாடுகளுக்கு எதிராக அரசியல் ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் அழுத்தத்தை கொடுத்து, ஒரு புதிய காலனித்துவ கொள்கையை அமெரிக்கா பின்பற்றுகிறது. வரி விதிப்பு என்று அமெரிக்கா அச்சுறுத்தினாலும், ஒரே எண்ணம் உள்ள பிரிக்ஸ் அமைப்பில் உள்ள இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளின் ஆதரவு எங்களுக்கு இருக்கிறது. எங்களை மிரட்டி பணிய வைக்க முடியாது. - - மரியா ஜகரோவா ரஷ்ய வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளர்

இந்தியாவுக்கு உரிமை உண்டு!

ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதைக் கண்டித்து, இந்தியப் பொருட்கள் மீதான இறக்குமதி வரியை உயர்த்துவதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார். இதற்கு ரஷ்யா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ரஷ்ய அதிபர் மாளிகை வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது: வர்த்தக மற்றும் பொருளாதார கூட்டாளிகளை தேர்ந்தெடுப்பதற்கான முழு உரிமை, இறையாண்மை கொண்ட நாடுகளுக்கு உண்டு. ஒவ்வொரு நாட்டின் நலன்களுக்கும் ஏற்ப, கூட்டாளிகளை தேர்ந்தெடுக்கும் சுதந்திரம் அனைத்து நாடுகளுக்கும் உள்ளது. ரஷ்யாவுடனான வர்த்தக உறவுகளைத் துண்டிக்க நாடுகளைக் கட்டாயப்படுத்தும் அமெரிக்காவின் முயற்சிகள் சட்டவிரோதமானது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

சீனாவும் எச்சரிக்கை

ஈரான், ரஷ்யாவில் இருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்த வேண்டும் என்ற அமெரிக்காவின் கோரிக்கையை ஏற்க முடியாது என, சீனா திட்டவட்டமாக கூறியுள்ளது. சீனா மீது 100 சதவீத வரி விதிக்கப்படும் என அமெரிக்கா அறிவித்தது. இதற்கு பதிலளித்துள்ள சீன வெளியுறவுத் துறை, 'கட்டாயப்படுத்தியோ, அழுத்தம் கொடுத்தோ எதையும் சாதிக்க முடியாது. நாட்டின் இறையாண்மை, பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டு நலன்களில் எப்போதும் உறுதியாக நிற்போம். நாட்டு மக்களின் நலனுக்காக எரிசக்தி வினியோகத்தை உறுதி செய்வோம்' என, கூறியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Subburamu Krishnasamy
ஆக 06, 2025 07:59

Russia China and India must stop exporting very essential goods to USA. Total boycott by the countries affected by USA must unit and fight against Trump administration. He is spoiling very economy and peace. He is a cruel dictator and colonial mindset He is disrespecting democracy in the world by supporting terrorists countries. It's how's Trump 's cruel terrorists mindset The greatest enemy to world peace is Trump


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை