ஒருங்கிணைந்த வளர்ச்சிக்கு ஒற்றுமை, சமத்துவம் தான் தூண்கள்; ஜி20 மாநாட்டில் தீர்மானம்
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
ஜோகன்னஸ்பர்க்: உலகளாவிய ஒருங்கிணைந்த வளர்ச்சிக்கு ஒற்றுமை, சமத்துவம் மற்றும் நிலைத்தன்மை தான் முக்கிய தூண்கள் என்று ஜோகன்னஸ்பர்க்கில் நடந்த ஜி20 மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.தென்னாப்ரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் நகரில் ஜி20 மாநாடு நடைபெற்றது. இதில், இந்தியா, ரஷ்யா, சீனா, இத்தாலி, ஜெர்மனி, ஆஸ்திரேலியா, கனடா, ஜப்பான், துருக்கி உள்பட இந்த அமைப்பில் இடம்பெற்றுள்ள மேலும் பல நாடுகள் கலந்து கொண்டன. இந்த மாநாட்டில் எரிசக்தி பாதுகாப்பு, பருவநிலை மாற்றம் மற்றும் பேரிடர் மீட்பு மற்றும் நிவாரணம் உள்ளிட்ட பல்வேறு சர்வதேச பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்பட்டன. மாநாட்டில் அனைத்து நாடுகளின் தலைவர்களும் இணைந்து தீர்மானத்தை நிறைவேற்றினர். அதில் கூறியிருப்பதாவது; உலகளாவிய ஒருங்கிணைந்த வளர்ச்சியின் முக்கிய தூண்களாக ஒற்றுமை, சமத்துவம் மற்றும் நிலைத்தன்மை திகழ்கிறது. மேலும், சர்வதேச சட்டங்கள், மனிதாபிமான சட்டங்கள் மற்றும் ஐநா சாசனங்களை அனைவரும் மதித்து நடக்க வேண்டும். (ரஷ்யா, இஸ்ரேல் பெயர்களை குறிப்பிடாமல்) ஐநா சட்ட விதிகளுக்குட்பட்டு, பிற நாடுகளின் நிலப்பரப்பை கைப்பற்ற முனைப்பு காட்டுவது போன்ற செயல்களை தவிர்க்க வேண்டும். பேரிடர்களால் பாதிக்கப்படும் சிறிய தீவுகள் மற்றும் வளரும் நாடுகளுக்கு சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். அனைத்து நாடுகளும் மனித உரிமைகள் மற்றும் அடிப்படை சுதந்திரங்களை மதிக்கும் விதமாக நட்புறவை வளர்க்க வேண்டும். தொழில்மயமாக்கல் என்பது நிலையான வளர்ச்சியின் அடிக்கல்லாகும், இவ்வாறு அதில் இடம்பெற்றிருந்தது.