ஸ்பெயின் நகரில் இறப்பதற்கு தடை சமூக வலைதளத்தால் மீண்டும் பிரபலம்
கிரனாடா, ஆக. 3-இறப்பது சட்டவிரோதமானது என்ற விசித்திரமான ஒரு சட்டம், ஸ்பெயினின் ஒரு சிறிய நகரில் இயற்றப்பட்டுள்ளது. இது, சமூக வலைதள பதிவால் மீண்டும் பிரபலமடைந்துள்ளது. ஐரோப்பிய நாடான ஸ்பெயினின் கிரனாடா மாகாணத்தில் அமைந்துள்ளது லா ன்ஜரோன் என்ற ஒரு அழகான சிறிய நகரம் . வெறும் 4,000 பேர் வசிக்கக்கூடிய இந்நகரம், மூலிகைகள் நிறைந்த நீரூற்றுகளுக்கு பிரபலமானது. 18ம் நுாற்றாண்டில் நிறுவப்பட்ட இந்த நகரின் ஸ்பா எனப்படும் உடலுக்கு புத்துணர்வு ஊட்டும் மையங்கள், பல்வேறு நோய்களுக்கான சிகிச்சை பெறுவதற்காக வரும் சுற்றுலாப் பயணியரை ஈர்க்கிறது. நீர் மற்றும் உணவுத் திருவிழாக்களுக்கும் பெயர்பெற்ற லான்ஜரோன், ஒரு விசித்திரமான சட்டத்தாலும் உலகளவில் அறியப்பட்டது. இறப்பது சட்டவிரோதமானது என்று அங்கு சட்டம் இயற்றப்பட்டு உள்ளது. நகரத்தில் உள்ள ஒரே ஒரு கல்லறை தோட்டம் நிரம்பிவிட்டதால், 1999ல் அப்போதைய மேயர் ஜோஸ் ரூபியோவால் இந்த விசித்திரமான சட்டம் பிறப்பிக்கப்பட்டது. புதிய கல்லறை தோட்டத்துக்கான நிலம் கிடைக்கும் வரை, லான்ஜரோன் மக்கள் இறப்பதற்கு தடை விதிக்கப்படுகின்றனர் என்று அவர் அப்போது அறிவித்தார். அதிகாரி களால் இந்த பிரச்னைக்கு தீர்வு காணும் வரை, மக்கள் தங்கள் வாழ்க்கைக்கு முன்னுரிமை அளித்து நலமுடன் வாழவேண்டும் என்பதை வலியுறுத்தவே மேயர், இவ்வாறு நகைச்சுவையான அணுகுமுறையை கையாண்டதாக கூறப்பட்டது. இந்த சட்டத்தால் யாருக்கும் அபராதம் விதிக்கப்படவில்லை, கைது செய்யப்படவில்லை, இறந்ததற்காக தண்டிக்கப்படவில்லை. இந்த சட்டம் முற்றிலும், அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுப்பதை நோக்கமாகவே கொண்டிருந்தது. ஆனால், 26 ஆண்டுகள் கடந்த பின்னும், அந்த நகரில் தற்போதும் ஒரே ஒரு கல்லறை தோட்டம் மட்டுமே உள்ளது. இந்த விசித்திரமான சட்டம் குறித்து சமூக வலைதளத்தில் பதிவுகளை வெளியிடுவோரால், 26 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. ஐரோப்பிய நாடான நார்வேயில் உள்ள லாங்யர்பியென் நகரத்தில், 1950ம் ஆண்டு முதல் இறப்பதற்கான தடை உள்ளது. பிரான்சில் உள்ள கக்னாக்ஸ், சர்போரென்க்ஸ்; பிரேசிலில் உள்ள பிரிடிபா மிரிம்; இத்தாலியில் உள்ள பால்சியானோ டெல் மாசிகோ ஆகிய நகரங்களிலும் இதே போன்ற தடை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.