மேலும் செய்திகள்
அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் வெற்றி
07-Nov-2024
கொழும்பு: பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இலங்கை பார்லிமென்ட் தேர்தல் நாளை ( நவ.,14) நடக்கிறது. இலங்கையில் அதிபர் தேர்தலை தொடர்ந்து பார்லிமென்ட் தேர்தல் நாளை நடைபெறுகிறது. மொத்தம் உள்ள 225 உறுப்பினர்களுக்கான இடங்களில் 196 இடங்கள் நேரடியாக மக்கள் மூலம் தேர்வு செய்யப்படுகிறது. மீதமுள்ள 29 தேசிய பட்டியலில் இருந்து தேர்வு செய்யப்படும். அதேபோல, அதிபர் தேர்தலை காட்டிலும் பார்லிமென்ட் தேர்தல் சற்று மாறுபட்டதாக இருக்கும். அதாவது, ஒரு வாக்காளர் 3 வேட்பாளர்களுக்கு வாக்களிக்க வேண்டும். அதேபோல, ஒரு கட்சியையும் தேர்வு செய்ய வேண்டும். அதில், 3 வேட்பாளர்களை தேர்வு செய்துவிட்டு, கட்சியை தேர்வு செய்யாவிட்டால், அந்த வாக்கு செல்லாததாகி விடும்.இந்த அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற அநுர குமாரா திசநாயகா தான் விரும்பிய சட்ட திருத்தங்களை செய்ய, பார்லிமென்டில் அவரது கட்சி மெஜாரிட்டியை பெற்றிருக்க வேண்டும். அதிபர் தேர்தலுக்கு முன்பாக, அநுர குமாரா திசநாயகாவின் கட்சி பார்லிமென்டில் வெறும் 3 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றிருந்தது. இதனால், அதிபர் தேர்தலில் தனக்கு உருவான அலையை, பயன்படுத்தி பார்லிமென்டிலும் கூடுதல் உறுப்பினர்களைப் பெற்று வலுவான அரசை அமைக்க அவர் முயற்சி செய்வார். இதுவரை நடந்த தேர்தல்களில் அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற கட்சிகளே பார்லி தேர்தலிலும் வெற்றி பெற்றிருக்கின்றன. எனவே, அநுர குமாரா திசநாயகா கட்சிக்கே அதிக வாய்ப்புகள் இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த தேர்தலில் அதிபர் அநுரா குமாராவின் தேசிய மக்கள் சக்தி கட்சியோடு, முன்னாள் அதிபர் ரணில் விக்ரமசிங்கேவின் புதிய ஜனநாயக முன்னணியும், முன்னாள் அதிபர் ராஜபக்சேவின் பொதுஜன முன்னணி உள்ளிட்ட சிங்கள கட்சிகள் போட்டியிட்டுள்ளன. அதேபோல, எஸ்.ஸ்ரீதரன் தலைமையிலான இலங்கை தமிழரசுக் கட்சி, டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஈழ மக்கள் ஜனநாயக கட்சி, கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் தேசிய மக்கள் முன்னணி உள்ளிட்ட தமிழ் கட்சிகளும் தனித்தனியே களத்தில் நிற்கின்றன.
சிதறிப்போன ஒற்றுமை
கடந்த தேர்தல்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற பெயரில் கூட்டணி அமைத்து போட்டியிட்ட தமிழ் கட்சிகளுக்கு, கடந்த 2009ம் ஆண்டில் நாடாளுமன்றத்தில் 20 பிரதிநிதிகள் கிடைத்தனர். பின்னர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் மோதல் ஏற்பட்டது இதன் விளைவாக கடந்த தேர்தலின் போது தமிழ் கட்சிகளின் பிரதிநிதிகளின் எண்ணிக்கை 13ஆக குறைந்தது.எனவே, இந்தத் தேர்தலிலும் தமிழ் கட்சிகளின் எண்ணிக்கை மேலும் குறையவே வாய்ப்புள்ளதாக கருத்துக்கள் வெளியாகி வருகின்றன.
ராஜபக்சே குடும்பத்தினர் போட்டியில்லை
இலங்கை அரசியலில் கலந்த 30 ஆண்டுகளாக ஆதிக்கம் செலுத்தி வந்த ராஜபக்சே குடும்பத்தினர் யாரும் இந்த தேர்தலில் போட்டியிடவில்லை. அதுமட்டுமின்றி இலங்கை சுதந்திரம் அடைந்த காலத்தில் இருந்தே அந்த நாட்டு அரசியலில் ஆதிக்கம் செலுத்தி வந்த ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி ஆகிய இரண்டு கட்சிகளும் செல்லாக்காசாகி விட்டன.நாளை மாலை ஓட்டுப்பதிவு முடிந்த உடனே ஓட்டு எண்ணிக்கை தொடங்கி விடும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
07-Nov-2024