| ADDED : டிச 03, 2025 09:48 PM
கொழும்பு: டிட்வா புயல் நிவாரண பணிகளுக்கு உதவிய பிரதமர் மோடிக்கு இலங்கை அதிபர் அநுரகுமார திசநாயகே நன்றி தெரிவித்துள்ளார். இலங்கையில் டிட்வா புயல் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. 400க்கும் அதிகமானோர் பலியாகி உள்ளதோடு, 4 லட்சம் குடும்பத்தினர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதையடுத்து, ஆப்பரேஷன் சாகர் பந்து என்ற முன்னெடுப்பின் கீழ் இந்தியா, இலங்கைக்கு உதவிகளை வழங்கி வருகிறது. மருந்துகள், உணவு பொருட்களை கப்பல் மற்றும் போர் விமானங்கள் மூலம் அனுப்பி வைத்தது.இந் நிலையில், புயலால் சேதம் அடைந்த இலங்கைக்கு உதவிய பிரதமர் மோடிக்கு அந்நாட்டு அதிபர் அநுரகுமார திசநாயகே நன்றியை தெரிவித்துள்ளார். தமது எக்ஸ் வலை தள பக்கத்தில் ஒரு பதிவையும் அவர் வெளியிட்டுள்ளார்.அந்த பதிவில் கூறியுள்ளதாவது; சமீபத்திய பாதகமான வானிலைக்கு பின்னர் இலங்கைக்கு இந்தியா அளித்த உறுதியான ஆதரவிற்கும், பிரதமர் மோடியின் செய்திக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.சாகர் பந்து முன் முயற்சியின் கீழ் இந்தியாவின் உடனடி உதவி நமது கூட்டாண்மையின் ஆழத்தையும், நாடுகளுக்கு இடையிலான நீடித்த நல்லெண்ணத்தையும் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. இவ்வாறு அதிபர் அநுரகுமார திசநாயகே கூறி உள்ளார்.