UPDATED : டிச 26, 2024 04:28 PM |  ADDED : டிச 26, 2024 01:13 PM 
                            
                            
                         
                         
                     
                        
                              
                           
                        
                          
                                                      
டமாஸ்கஸ்: சிரியாவில் நடந்த துப்பாக்கிச் சண்டையில், முன்னாள் அதிபர் ஆசாத்துக்கு ஆதரவான வீரர்கள் தாக்கியதில், தற்போது ஆட்சியை கைப்பற்றியுள்ள கிளர்ச்சிப்படை வீரர்கள் 14 பேர் உயிரிழந்தனர்.மேற்காசிய நாடான சிரியா அதிபராக இருந்தவர் பஷர் அல்ஆசாத். பஷரின் குடும்பம், சிரியாவை கடந்த 50 ஆண்டுகளாக ஆண்டு வந்தது. இவரது அரசுக்கு எதிராக கிளர்ச்சியாளர்கள் படை, 2011 முதல் போரிட்டு வருகிறது. பல்வேறு நகரங்களை கைப்பற்றிய கிளர்ச்சியாளர்கள், தலைநகர் டமாஸ்கஸ்சை சமீபத்தில் சூழ்ந்தனர். இதை தொடர்ந்து, பஷர் அல்ஆசாத், சிரியாவை விட்டு தப்பிச் சென்று ரஷ்யாவில் தஞ்சம் அடைந்தார். அவருடன் அவரது மனைவி அஸ்மா அல்ஆசாத் மற்றும் மூன்று பிள்ளைகளும் ரஷ்யா சென்றனர்.ஆசாத் அதிபர் பதவியை இழந்தாலும், அவருக்கு ஒரு சில இடங்களில்  இன்னும் ஆதரவு இருக்கிறது. அவரது ராணுவத்தில் பணியாற்றிய முன்னாள் வீரர்கள், தங்களது ஆயுதங்களுடன் இன்னும் கிளர்ச்சிப்படையினரை எதிர்த்து தாக்குதல் நடத்தி வருகின்றனர்.இந்நிலையில், இன்று (டிச.,26) கிர்பெத் அல் மாஸா பகுதியில்  முன்னாள் ராணுவ அதிகாரி ஒருவரை கைது செய்ய சென்ற போது, ஆசாத் ஆதரவு உள்ளூர் குழுவினர் திடீர் தாக்குதல் நடத்தினர். அப்போது நடந்த துப்பாக்கிச் சண்டையில் தற்போதைய அரசு ஆதரவு படை வீரர்கள் 14 பேர் உயிரிழந்தனர்.