புதுடில்லி, அருணாச்சல பிரதேசத்தில் உள்ள 11 இடங்களின் பெயர்களை மாற்றி, புதிய பெயர்களை சீனா சூட்டியுள்ளதற்கு, மத்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.'சீனா இதுபோன்ற அடாவடிகளில் ஈடுபடுவது இது முதல் முறையல்ல; இதை ஏற்க வேண்டிய அவசியம் இல்லை' என, மத்திய அரசு தெரிவித்துள்ளது. நம் நாட்டின் வட கிழக்கு மாநிலமான அருணாச்சல பிரதேசம், சீன எல்லையை ஒட்டி அமைந்துள்ளது.இந்த பகுதிக்கு, சீனா உரிமை கொண்டாடி வருகிறது. இதை 'தெற்கு திபெத்' என சீனா அழைத்து வருகிறது. சீன படைகள் இங்கு அவ்வப்போது அத்துமீறுவதும் வழக்கம்.
இதற்கு மத்திய அரசு தகுந்த பதிலடி கொடுத்து வருகிறது.'அருணாச்சல பிரதேசம் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி' என, சர்வதேச அரங்கிலும் மத்திய அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இந்நிலையில், அருணாச்சல பிரதேசத்தில் உள்ள, 11 இடங்களின் பெயர்களை மாற்றி, புதிய பெயர்களை சூட்டி சீனா தற்போது அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
11 இடங்கள்
புதிதாக சீனாவால் பெயர் சூட்டப்பட்டுள்ள 11 இடங்களில் ஐந்து மலைச்சிகரங்கள், இரண்டு குடியிருப்பு பகுதிகள், இரண்டு நிலப்பகுதிகள், இரண்டு ஆறுகள் ஆகியவை அடங்கும். இவற்றை, 'திபெத்தின் தெற்கு பகுதியான ஜங்னான்' என, சீனா குறிப்பிட்டுள்ளது.இந்த பெயர்கள், சீன, திபெத்திய மற்றும் பின்யின் மொழிகளில் வெளியிடப்பட்டுள்ளன.இதை, மாகாண கவுன்சில் வழங்கிய புவியியல் பெயர்கள் குறித்த விதிமுறைகளுக்கு ஏற்ப, சீன உள்விவகாரத் துறை அமைச்சரவை வெளியிட்டுள்ளதாக, சீன கம்யூனிஸ்ட் கட்சியின் குளோபல் டைம்ஸ் பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது. சீன அரசின் இந்த நடவடிக்கையை திட்டவட்டமாக நிராகரித்துள்ள வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் அரிந்தம் பக்சி கூறியதாவது:அருணாச்சல பிரதேசத்தின் சில இடங்களுக்கு சீனா புதிய பெயர்களை சூட்டியுள்ளதாக வெளியான செய்தி, அரசின் கவனத்துக்கு வந்துள்ளது.சீன அரசு இதுபோன்ற பெயர்களை மாற்றுவது புதிய விஷயமல்ல; ஏற்கனவே சில முறை இதுபோல் செய்துள்ளது. அருணாச்சல பிரதேசம் எப்போதும் இந்தியாவின் ஒருங்கிணைந்த, பிரிக்க முடியாத பகுதி. இவ்வாறு அவர் கூறினார். எரிச்சல்
'இந்திய - சீன எல்லை இப்போதும் பதற்றம் நிறைந்த, அபாயகரமான பகுதியாக உள்ளது' என, நம் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் சமீபத்தில் தெரிவித்திருந்தார். மேலும், சமீபத்தில் 'ஜி - 20' மாநாடு தொடர்பான நிகழ்ச்சியும் அருணாச்சல பிரதேசத்தில் நடந்தது. இதனால் எரிச்சல் அடைந்துள்ள சீன அரசு, இந்த பெயர் மாற்ற நடவடிக்கைகளில் இறங்கியிருக்கலாம் என தெரிகிறது.