UPDATED : நவ 27, 2025 07:55 PM | ADDED : நவ 27, 2025 07:09 AM
விக்டோரியா: ஹாங்காங் அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் தீப்பற்றியதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 65 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 300 பேர் காணாமல் போயுள்ளனர். இந்த சம்பவத்தில் சந்தேகத்தின் பேரில் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.நம் அண்டை நாடான சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள தீவு நாடான ஹாங்காங்கின், தை போ மாகாணத்தில் 'வாங் புக் கோர்ட்' என்ற அடுக்குமாடி குடியிருப்பு வளாகம் உள்ளது. இங்கு, தலா 35 மாடிகளுடன் வரிசையாக எட்டு கட்டடங்கள் உள்ளன. மொத்தம் உள்ள 2,000 வீடுகளில் 4,800 பேர் வசித்து வருகின்றனர். https://www.youtube.com/embed/BXzuKv7DnRkஇந்த குடியிருப்பு வளாகத்தில் புதுப்பிக்கும் பணிகளுக்காக மூங்கில் சாரங்கள் மற்றும் வலைகள் கட்டப்பட்டிருந்தன. ஒரு கட்டடத்தில் இருந்த மூங்கில் சாரத்தில் நேற்று மதியம் திடீரென தீப்பற்றியது. காற்றின் வேகத்தால் அடுத்தடுத்த கட்டடங்களுக்கும் தீ மளமளவென பரவியது.ஏழு கட்டடங்களில் தீ பரவி கொழுந்து விட்டு எரிந்ததால், அந்தப்பகுதியே சிவப்பு நிறமாக காட்சியளித்ததுடன் புகை மண்டலமாக மாறியது. தகவல் அறிந்து 128 தீயணைப்பு வாகனங்களில், 767 தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து கட்டுக்கடங்காமல் எரிந்த தீயை பல மணி நேரம் போராடி அணைத்தனர். இந்த தீ விபத்தில், தீயணைப்பு படை வீரர் உட்பட 65 பேர் உயிரிழந்தனர். அவர்களில் பெரும்பாலானோர் முதியோர் என தெரியவந்துள்ளது. மேலும் 300 பேர் காணாமல் போயுள்ளனர். பலர் பலத்த காயமுற்று மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவத்தில் சந்தேகத்தின் பேரில் 3 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.