நான் சமையல்காரன்; பிரெஞ்சு பிரைஸ் தயாரித்து பரிமாறிய டிரம்ப்; கமலாவை விட கில்லி என்கிறார்!
வாஷிங்டன்: பென்சில்வேனியாவில் பிரெஞ்சு பிரைஸ் தயாரித்து அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் பரிமாறினார். நான் கமலா விட 15 நிமிடம் அதிகமான வேலை செய்தேன் என டிரம்ப் கூறினார்.அமெரிக்க அதிபர் தேர்தல், நவம்பர் 5ல் நடக்கிறது. தேர்தலுக்கு இன்னும் இரண்டு வாரங்களே உள்ள நிலையில், கமலா ஹாரிசும், டொனால்டு டிரம்பும் தீவிரமான தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். கடந்த மாதம், பென்சில்வேனியாவில் நடந்த தேர்தல் பிரசாரத்தில், 'எப்படி இருக்கிறது என்று பாருங்கள், நான் ஒரு 'ப்ரை குக்' வேலை செய்ய விரும்புகிறேன்' என டிரம்ப் பேசியிருந்தார்.இதனை நிறைவேற்றும் வகையில், பென்சில்வேனியாவின் பீஸ்டர்வில்லே ட்ரெவோஸில் உள்ள மெக்டொனால்டு நிறுவனத்தில், பிரெஞ்சு பிரைஸ் தயாரித்து அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் பரிமாறினார். பின்னர் டிரம்ப் கூறியதாவது: இங்கே இருக்கும் கூட்டத்தைப் பாருங்கள். என் மீது நம்பிக்கை இருப்பதால் அவர்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். அவர்களுக்கு நம்பிக்கை தேவை. நான் இப்போது கமலாவை விட 15 நிமிடங்கள் அதிகமாக வேலை செய்திருக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார். அமெரிக்கா முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் கமலா ஹாரிஸ் பென்சில்வேனியாவில் மக்களின் ஓட்டுக்களை பெற அதிக கவனம் செலுத்துகின்றனர். இரண்டு பிரசார கூட்டங்கள் நடத்த நூற்றுக்கணக்கான மில்லியன் டாலர்களை செலவழித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.