உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / மதிக்காமல் சண்டையிட்ட இஸ்ரேல் - ஈரான் போர் நிறுத்தம் அறிவித்த டிரம்ப் அப்செட்

மதிக்காமல் சண்டையிட்ட இஸ்ரேல் - ஈரான் போர் நிறுத்தம் அறிவித்த டிரம்ப் அப்செட்

டெல்அவிவ் : 'ஈரான் மற்றும் இஸ்ரேல் ஆகிய இரு நாடுகளும் கடந்த 12 நாட்களாக நடத்தி வந்த போரை முழுதுமாக நிறுத்த ஒப்புக்கொண்டனர்' என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் நேற்று அறிவித்தார். அதன் பின்னும் இரு நாடுகளும் மாறி மாறி ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தினர்.மேற்காசிய நாடுகளான இஸ்ரேல் மற்றும் ஈரான், கடந்த 12 நாட்களாக கடும் தாக்குதலில் ஈடுபட்டு வந்தன. ஈரானை அணு ஆயுதம் தயாரிக்க விடமாட்டோம் என்று கூறி, அந்நாட்டின் அணுசக்தி நிலையங்கள் மீது கடந்த ஜூன் 13ல் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது.பதிலுக்கு இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணைகளை வீசியது. இது இஸ்ரேலின் டெல்அவிவ், ஹைபா, ரமாத் கான் உள்ளிட்ட முக்கிய நகரங்கள் கடும் சேதத்தை சந்தித்தன.

அறிவிப்பு

இரு நாடுகளுக்கு இடையே நடந்து வந்த சண்டையில், கடந்த 22ல் இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா நேரடியாக களமிறங்கியது. ஈரானின் மூன்று முக்கிய அணுசக்தி நிலையங்கள் மீது சக்திவாய்ந்த, 'பங்கர் பஸ்டர்' உட்பட பல வெடிகுண்டுகளை வீசியது. இதனால் போர் இன்னும் மோசமடையும் என்ற அச்சம் ஏற்பட்டது.அதே போல் ஈரான், கத்தாரில் உள்ள அமெரிக்காவின் விமானப் படை தளங்களை குறிவைத்து நேற்று முன்தினம் பதிலடி தாக்குதல் நடத்தியது. இந்நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்ப் இரு நாடுகளும் முழுமையான போர் நிறுத்தத்துக்கு ஒப்புக்கொண்டதாக நேற்று அதிகாலை 3:30 மணிக்கு அறிவித்தார்.இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், 'இஸ்ரேல் மற்றும் ஈரான் முழுமையான போர் நிறுத்தத்துக்கு ஒப்புக்கொண்டன. 'தற்போதிலிருந்து ஆறு மணிநேரத்திற்குள் இரு நாடுகளும் மோதலை நிறுத்துவர். போர் நிறுத்த நடைமுறைகளை துவக்குவர். இந்த 12 நாள் போரின் முடிவை உலகமே வரவேற்கும்' என தெரிவித்தார்.

பெரும் சங்கடம்

இந்த அறிவிப்பை முதலில் ஈரான் ஒப்புக்கொண்டது. ஆனால் அதிபர் டிரம்ப் அறிவித்த பின்னரும் ஈரான் மற்றும் இஸ்ரேல் தாக்குதல்களை தொடர்ந்தன. ஈரான் தங்கள் நாடு மீது இரு ஏவுகணைகளை வீசியதாகவும், அதை இடைமறித்து அழித்ததாகவும் இஸ்ரேல் கூறியது. இதற்கு பதிலடியாக ஈரான் தலைநகர் டெஹ்ரானை நடுங்கச் செய்வோம் என இஸ்ரேல் அமைச்சர் அறிவித்தார்.இதை மறுத்த ஈரான், போர் நிறுத்த அறிவிப்புக்கு பின் எந்த ஏவுகணையையும் தாங்கள் ஏவவில்லை என கூறியது. இஸ்ரேல் தான் போர் நிறுத்தத்திற்கு பின்னும் தாக்குதல் நடத்தியதாக ஈரான் கூறியது.போர் நிறுத்தம் என டிரம்ப் அறிவித்த பின்னரும் இரு நாடுகளும் மாறி மாறி ஏவுகணைகளை வீசியது அவருக்கு பெரும் சங்கடத்தை ஏற்படுத்தியது.

இது குறித்து நேட்டோ மாநாட்டுக்கு புறப்படும் முன் அதிபர் டிரம்ப் அமெரிக்காவில் செய்தியாளர்களிடம் பேசுகையில், “ஈரான், இஸ்ரேல் போர் நிறுத்தத்தை மீறியுள்ளன. இஸ்ரேலின் செயல்கள் எனக்கு மகிழ்ச்சி அளிக்கவில்லை. ''இந்த இரு நாடுகளும் நீண்ட காலமாக கடும் சண்டையில் ஈடுபட்டு வருகின்றன. என்ன செய்கிறோம் என்பது அவர்களுக்கு தெரியவில்லை” என கூறி, கோபத்தில் இரு நாடுகளையும் ஆபாசமாகவும் விமர்சித்தார்.தொடர்ந்து தன் சமூக வலைதள பக்கத்திலும் டிரம்ப் இது குறித்து பதிவிட்டார். அதில், 'டெஹ்ரான் மீது குண்டுகளை வீசாதீர்கள். அப்படி செய்தால் அது மிகப்பெரிய விதிமீறல். உங்கள் விமானிகளை இப்போதே நாடு திரும்பச் சொல்லுங்கள்' என, இஸ்ரேல் குறித்து குறிப்பிட்டார்.

சம்மதம்

அடுத்த அரை மணிநேரத்தில், 'இஸ்ரேல், ஈரானை தாக்காது. போர் விமானங்கள் இஸ்ரேல் திரும்பின' என அறிவித்தார்.போர் நிறுத்தத்தை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவும் ஒப்புக்கொண்டார். 'ஈரானின் அணுசக்தி மற்றும் ஏவுகணைத் திட்டங்களின் அச்சுறுத்தலை நீக்குவது எங்களின் இலக்காக இருந்தது. அதை அடைந்துவிட்டோம். 'அதனால் டிரம்பின் ஒருங்கிணைப்பில் ஈரானுடன் இருதரப்பு போர் நிறுத்தத்துக்கு சம்மதம் தெரிவிக்கப்பட்டது' என்றார்.https://www.instagram.com/p/DLT_hZNSd-b/கடந்த 12 நாட்களாக நடந்த இஸ்ரேல் - ஈரான் போரில் நுாற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். இதில் ஈரானில் உயிர் பலி அதிகம். அங்கு நேற்று வரை போரினால் 974 பேர் கொல்லப்பட்டனர். 3,458 பேர் காயமடைந்தனர். இஸ்ரேலில், 28 பேர் பலியாகினர். 1,000க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

அமெரிக்க அதிபரின் மற்றொரு பொய்!

கடந்த ஜனவரியில் அமெரிக்க அதிபராக பதவியேற்ற டொனால்டு டிரம்ப், சர்வதேச அளவில் பல நிகழ்வுகளுக்கு பெருமையை தேடிக் கொள்ளும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார். ஆனால், அவை பொய் என்று நிரூபிக்கப்பட்டுள்ளன.இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்த மோதலை நிறுத்தியதாக டிரம்ப் அறிவித்தார். ஆனால், அது பொய் என்று மத்திய அரசு தொடர்ந்து கூறி வருகிறது.வர்த்தகம் தொடர்பாக பேசுவதற்காக சீன அதிபர் ஷீ ஜின்பிங் தன்னை அழைத்ததாக டிரம்ப் கூறினார். ஆனால், அது வடிகட்டிய பொய் என்று சீன அதிபர் கூறினார்.உக்ரனை ரஷ்ய படைகள் சுற்றி வளைத்துள்ளதாக டிரம்ப் கூறிக் கொண்டார். ஆனால், அதில் சிறிதும் உண்மை இல்லை என்று உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி போட்டு உடைத்தார்.இந்த வரிசையில், இஸ்ரேல் - ஈரானுக்கும் இடையே போர் நிறுத்த உடன்பாட்டை ஏற்படுத்தியதாக டிரம்ப் நேற்று கூறினார். ஆனால் அதுபோன்று எதுவும் நடக்கவில்லை என்று ஈரான் கூறியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Saai Sundharamurthy AVK
ஜூன் 25, 2025 22:45

எப்படியும் இவருக்கு நோபல் பரிசு கிடைக்கப் போவதில்லை.


Anand
ஜூன் 25, 2025 10:23

உங்களை யார் மதிக்கிறான்? உங்க மோட்டார் வாயை மூடிக்கொண்டிருந்தாலே போதும், ஓரளவுக்காவது மதிப்பார்கள்..


Baskar
ஜூன் 25, 2025 08:32

இரண்டாவது முறை அந்தர் பல்டி அடித்தார்


Jack
ஜூன் 25, 2025 06:18

இவுங்கள விடுங்க ..வடகொரியா மீது தாக்குதல் பத்தி யோசிக்கலாமே


Mani . V
ஜூன் 25, 2025 04:53

நீ ஒரு பைத்தியம். உன்னை யார் மதிக்கப் போகிறார்கள்? ஆமா, நீ என்ன உலகத்துக்கெல்லாம் போலீஸுன்னு நினைப்பா?


நிக்கோல்தாம்சன்
ஜூன் 25, 2025 04:33

யோவ் ட்ரம்ப்பு நீ எங்க ஊரு ஸ்டிக்கரையே மிஞ்சிட்ட


SUBBU,MADURAI
ஜூன் 25, 2025 04:24

எப்படியாவது அமைதிக்கான அந்த நோபல் பரிசை வாங்கிடலாம்னு பாத்தா இவனுக விட மாட்டாய்ங்க போலிருக்கே! இப்பவே 79 நமக்கு வயசாகிருச்சு இருக்கிற பல்லும் போன பிறகு நோ பல்தான் போல!


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை