உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் /  போராடும் மக்களை சுட முயன்றால் காப்பாற்றுவோம் ஈரான் அரசுக்கு டிரம்ப் எச்சரிக்கை

 போராடும் மக்களை சுட முயன்றால் காப்பாற்றுவோம் ஈரான் அரசுக்கு டிரம்ப் எச்சரிக்கை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: 'ஈரானில், அமைதியான முறையில் போராடுபவர்களை அந்நாட்டு அரசு சுட்டுக் கொன்றால், அவர்களை காப்பாற்ற அமெரிக்கா முன்வரும். நாங்கள் தாக்குதலுக்கு தயாரான நிலையில் இருக்கிறோம்' என, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். மேற்காசிய நாடான ஈரான் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளது. அங்கு விலைவாசி விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளது. அமெரிக்க டாலருக்கு நிகரான ஈரான் கரன்சி 14.2 லட்சம் ரியாலாக சரிவு கண்டுள்ளது. இதைத் தொடர்ந்து, கடந்த மாதம் 28ம் தேதி முதல் அங்குள்ள முக்கிய நகரங்களில் வணிகர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவாக, அந்நாட்டு பல்கலை மாணவர்களும் போராட்டத்தில் இணைந்துள்ளனர். போராட்டத்தின் போது, அரசுக்கு எதிரான முழக்கங்கள் எழுப்பப்பட்டு வருகின்றன. இந்நிலையில், ஈரான் முழுதும் இந்த போராட்டம் தீவிரமடைந்துள்ளது. லோரெஸ்தான், கோம் போன்ற பகுதிகளில், பாதுகாப்பு படையினருடன் ஏற்பட்ட மோதலில், ஏழு பேர் கொல்லப்பட்டனர். மேலும், பலர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். போராட்டங்களை தடுக்க, ஒருசில பகுதிகளில் இணைய சேவையும் முடக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஈரானில் நடக்கும் போராட்டம் தொடர்பாக, சமூக வலைதளத்தில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் வெளியிட்ட பதிவில், 'அமைதியான முறையில் போராடுபவர்களை ஈரான் அரசு சுட்டுக் கொன்றால், அவர்களை காப்பாற்ற அமெரிக்கா முன்வரும். நாங்கள் தாக்குதலுக்கு தயாரான நிலையில் இருக்கிறோம்' என, குறிப்பிட்டுள்ளார். போராட்டக்காரர்களுக்கு எதிராக வன்முறையை ஈரான் அரசு கட்டவிழ்த்து விட்டால், ராணுவ ரீதியிலான நடவடிக்கைகளை எடுக்க அமெரிக்கா தயங்காது என்பதையும் மறைமுகமாக டிரம்ப் எச்சரித்துள்ளார். ஈரானின் உள் விவகாரங்களில் தலையிட வேண்டாம் என, அவருக்கு ஈரான் அதிபர் மசூத் கண்டனம் தெரிவித்துள்ளார். ஈரான் மக்களின் போராட்டத்திற்கு இஸ்ரேலும் ஆதரவு தெரிவித்துள்ளது. ஈரான் பதிலடி ஈரான் தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலரும், பார்லி., முன்னாள் சபாநாயகருமான அலி லாரிஜானி கூறியதாவது: ஈரானில் போராட்டங்களை துாண்டி விடுவது அமெரிக்காவும், இஸ்ரேலும் தான். ஈரானின் உள் விவகாரங்களில் அமெரிக்கா தலையிட்டால், மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்காவின் நலன்கள் மற்றும் அதன் வீரர்களின் நலன்கள் பாதிக்கப்படும். இவ்வாறு கூறினார். கடந்த 2025 ஜூனில், ஈரானின் அணு மின்சக்தி நிலையங்கள் மீது அமெரிக்கா குண்டு வீசியது. இதற்கு பதிலடியாக கத்தாரில் உள்ள அமெரிக்க விமான தளத்தின் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Mani . V
ஜன 03, 2026 04:30

ஏனப்பு, தமிழ்நாட்டில் நியாயமான கோரிக்கைக்காகப் போராடும் மக்களை, மக்கள் விரோத கொடுங்கோல் அரசு வன்முறையை கையாண்டு கைது செய்கிறது. இந்த மக்கள் விரோத அரசை துவம்சம் செய்து விட்டு நோபல் பரிசு கேட்கலாமில்லையா?


சமீபத்திய செய்தி