ஆட்சிக்கு வந்தால் அவ்வளவு தான் கூகுளுக்கு டிரம்ப் எச்சரிக்கை
சான் பிரான்சிஸ்கோ: அமெரிக்காவில் அதிபர் பதவிக்கான தேர்தல் நவம்பர் மாதம் நடக்க உள்ளது. ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் கமலா ஹாரிஸ் வேட்பாளராக போட்டியிடுகிறார். குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டிரம்ப் போட்டியிடுகிறார். இந்நிலையில், 'டிரம்ப் தேர்தல் ரேஸ் 2024' என்று கூகுள் தளத்தில் தேடினால், டிரம்பை பற்றி எதிர்மறை செய்திகள் அதிகம் காட்டப்படுவதாகவும், கமலா ஹாரிசின் பிரசார இணையதளம் காட்டப்படுவதாகவும் குடியரசு கட்சியினர் குற்றம்சாட்டினர். இது குறித்து டிரம்ப் நேற்று வெளியிட்ட அறிக்கையில், 'கூகுள் நிறுவனம் செய்வது சட்டவிரோத நடவடிக்கை. தேர்தலின் போது அவர்களின் அப்பட்டமான தலையீட்டை இது காட்டுகிறது. இதற்காக நீதித்துறை அவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கும் என்று நம்புகிறேன்.'அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தவறினால், ஆட்சிக்கு வந்த பின் சட்டத்துக்கு உட்பட்டு நானே அவர்கள் மீது வழக்கு தொடர நடவடிக்கை எடுப்பேன்' என்று கூறியுள்ளார்.இதற்கு பதிலளித்துள்ள கூகுள் நிறுவனம், 'எந்த வேட்பாளருக்கும் சாதகமான முடிவுகளை கூகுள் மாற்றியமைக்கவில்லை. உலகத்தின் ஏதோ ஒரு இடத்தில், யாரோ ஒருவர் தேடிய தகவலை வைத்து இவ்வாறு குற்றம் சாட்டுவது சரியல்ல' என கூறியுள்ளது.