காசாவில் போர் தொடங்கி 2 ஆண்டுகள் நிறைவு; எகிப்தில் இஸ்ரேல்- ஹமாஸ் இடையே பேச்சுவார்த்தை
ஜெருசலேம்: இஸ்ரேல்- ஹமாஸ் படையினர் இடையான போர் தொடங்கி, இன்றுடன் ( அக்., 7) இரண்டு ஆண்டுகள் நிறைவடைகின்றன. போரில் இறந்தவர்களை நினைவு கூரும் வகையில், ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர். மறுபுறம், எகிப்தில் இஸ்ரேல்- ஹமாஸ் படையினர் இடையே பேச்சுவார்த்தை 2வது நாளாக நீடிக்கின்றன.மேற்காசிய நாடான இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்தின் காசாவை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஹமாஸ் பயங்கரவாத குழு இடையே கடந்த 2023ம் ஆண்டு அக்டோபர் 7ம் தேதி போர் தொடங்கியது. முதலில் ஹமாஸ் படையினர் நடத்திய, தாக்குதல்களில், 1,000க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். அதுமட்டுமின்றி, 251 இஸ்ரேலியர்கள் பிணைக் கைதிகளாக ஹமாஸ் படையினரால் சிறைப்பிடிக்கப்பட்டனர். இதில், பெரும்பாலான பிணைக் கைதிகள் விடுவிக்கப்பட்ட நிலையில், 48 பேர் மட்டும் தற்போது ஹமாஸ் கட்டுப்பாட்டில் இருக்கின்றனர்.அதேநேரத்தில் ஹமாஸ் படையினருக்கு பதிலடி கொடுக்கும் வகையில், காசாவில் இஸ்ரேல் படையினர் நடத்தி வரும் தாக்குதலில் இதுவரை, 67,000க்கும் அதிகமான பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர். காசாவில் ஏராளமானோர் உணவின்றி பட்டினியில் தவித்து வருகின்றனர்.இந்நிலையில், காசா மீதான போர் தொடங்கி இன்றுடன் (அக். 7) இரண்டுஆண்டுகள் நிறைவடைகின்றன. இந்த சூழலில் உலக நாடுகள் இந்த போரை முடிவுக்கு கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன. இதனடிப்படையில், அமெரிக்க அதிபர் டிரம்ப் சமீபத்தில் 20 அம்ச அமைதி திட்டத்தை முன்மொழிந்தார். இதற்கு இஸ்ரேல் சம்மதித்துள்ள நிலையில், ஹமாஸ் குறிப்பிட்ட அம்சங்களுக்கு ஒப்புதல் அளிப்பதாகவும், சில நிபந்தனைகளுக்கு பேச்சு நடத்த விரும்புவதாகவும் தெரிவித்து இருந்தது.இதனால, இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்புக்கு இடையேயான பேச்சுவார்த்தை எகிப்தில் இரண்டாவது நாளாக நடந்து வருகிறது. இதனால் விரைவில் போர் முடிவுக்கு வருமா என்ற எதிர்பார்ப்பு உலக நாடுகள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.