அமைதிப்படையில் 25% பேரை குறைக்க ஐ.நா., சபை முடிவு
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
நியூயார்க்: அமெரிக்காவின் நிதி குறைப்பு காரணமாக, ஐக்கிய நாடுகள் சபையின் உலகளாவிய அமைதிப்படையில், 25 சதவீதம் பேரை குறைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஐக்கிய நாடுகளின் வரவு - செலவு திட்டங்கள் தேவையற்றதாக இருப்பதாக கூறி, அமெரிக்காவின் டிரம்ப் நிர்வாகம் நிதியுதவிகளைக் குறைத்துள்ளது. இதையடுத்து, ஐ.நா., அதன் சர்வதேச அமைதிப்படைகள் மற்றும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளோரில், 25 சதவீதம் பேரை குறைக்க திட்டமிட்டுள்ளது. இதன் விளைவாக, ராணுவத்தினர் 13,000 முதல் 14,000 பேர் தங்கள் நாடுகளுக்கு திருப்பி அனுப்பப்படுவர் என தெரிகிறது. இந்த ஆட்குறைப்பால் சண்டை நிறுத்தங்களை கண்காணித்தல், மோதல் நடைபெறும் பகுதிகளில் உள்ள பொதுமக்களை பாதுகாத்தல், மனிதாபிமான பணிகள் உள்ளிட்டவை பாதிக்கப்படும். தற்போது, உலகளாவிய பணிகளில் 50,000க்கும் மேற்பட்ட அமைதிப்படையினர் உள்ளனர். குறிப்பாக காங்கோ, தெற்கு சூடான், லெபனான் மற்றும் மத்திய ஆப்ரிக்க குடியரசு போன்ற மோதல் நிறைந்த பகுதிகளில் பணியாற்றி வருகின்றனர்.