போதைப்பொருளுடன் வந்த கப்பல் மீது அமெரிக்கப் படைகள் மீண்டும் தாக்குதல்
வாஷிங்டன்: கரீபியன் கடலில், போதைப்பொருளுடன் வந்த நீர்மூழ்கிக் கப்பல் மீது அமெரிக்கப்படைகள் தாக்குதல் நடத்தியுள்ளன. இதில் 2 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இந்தக் கப்பல் அமெரிக்காவை அடைந்து இருந்தால், 25 ஆயிரம் பேர் உயிரிழந்திருப்பார்கள் என அதிபர் டிரம்ப் கூறியுள்ளார். வெனிசுலா உள்ளிட்ட நாடுகளில் இருந்து அமெரிக்காவுக்கு போதைப்பொருட்கள் கடத்தி வருவதாக அதிபர் டிரம்ப் குற்றம்சாட்டி வருகிறார். இதனையடுத்து போதைப்பொருள் கடத்தும் கப்பல்கள் மீது அமெரிக்க ராணுவம் தாக்குதல் நடத்தியது. வெனிசுலா கடற்கரையில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட கப்பல் மீது அமெரிக்கப் படைகள் நடத்திய தாக்குதலில் 6 பேர் கொல்லப்பட்டனர். இது குறித்த வீடியோவையும் டிரம்ப் வெளியிட்டு இருந்தார். இதுவரை போதைப்பொருள் கடத்திய கப்பல்கள் மீது அமெரிக்க ராணுவம் 5 முறை நடத்திய தாக்குதலில் 27 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இந்நிலையில் ஆறாவது முறையாக, கரீபியன் கடலில் போதைப்பொருள் ஏற்றி வந்த நீர்மூழ்கி கப்பல் மீது அமெரிக்கப்படைகள் தாக்குதல் நடத்தி உள்ளன. இதனை உறுதிப்படுத்திய வெள்ளை மாளிகை,அந்த கப்பல் போதைப்பொருட்களுடன் அமெரிக்கா நோக்கி வந்ததாக தெரிவித்துள்ளது. இதில் 2 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இது தொடர்பாக டிரம்ப் வெளியிட்ட சமூக வலைதளப்பதிவில் கூறியுள்ளதாவது: அமெரிக்கா நோக்கி போதைப்பொருட்களுடன் வந்த நீர்மூழ்கி கப்பலை தாக்கி அழித்ததில் பெருமைப்படுகிறேன். இந்தக் கப்பலில் பென்டனில் உள்ளிட்ட போதைப்பொருள் இருந்ததை உளவுத்துறையினர் உறுதிப்படுத்தி உள்ளனர். தாக்குதலில் 2 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். இந்த கப்பலை அமெரிக்கா கடற்கரையில் அனுமதித்து இருந்தால் 25 ஆயிரம் அமெரிக்கர்கள் உயிரிழந்து இருக்கக்கூடும். இந்த தாக்குதலில் தப்பிய 2 பேர் கொலம்பியா, ஈக்வடார் நாடுகளுக்கு சென்று விட்டனர். அமெரிக்கப்படைகள் யாருக்கும் பாதிப்பு இல்லை. எனது ஆட்சியில் போதைப்பொருள் கடத்தலை பொறுத்துக் கொள்ள முடியாது. இவ்வாறு அந்த பதிவில் டிரம்ப் கூறியுள்ளார்.